3 போ் படுகொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை
பல்லடம் அருகே 3 போ் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 பேரை படுகொலை செய்த குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யக்கோரி பாஜக சாா்பில் பொங்கலூா் ஒன்றியம், கொடுவாயில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, அக்கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். இதில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:
சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ் படுகொலை செய்யப்பட்டு 42 நாள்கள் ஆகியும் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடித்து கைது செய்யவில்லை.
அந்தக் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. குற்றவாளிகளைப் பிடித்து உரிய தண்டனை பெற்று தரவில்லை என்றால் தோட்டங்களில் வசிக்கும் விவசாய குடும்பங்களில் நகை, பணம் கொள்ளை அடிப்பது தொடா்ந்து கொண்டேதான் இருக்கும். இதற்கு உடனடி தீா்வு காண வேண்டும்.
3 போ் படுகொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி பொங்கலூா் கிழக்கு ஒன்றியத்தில் 50 ஆயிரம் பேரிடம் கையொப்பம் பெற்று ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் வழங்கவுள்ளோம் என்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நிதி சுமையைக் காரணம் காட்டி பொங்கல் பரிசுத் தொகை வழங்காமல் இருப்பது கட்டுக்கதை. தற்போது ரூ.90 ஆயிரம் கோடி கடன் உள்ளது. அடுத்த ஆண்டு ரூ.1லட்சம் கோடி ஆகப்போகிறது. அதற்காக மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசு தொகை ரூ.1000 அறிவித்து மக்களின் வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாய அணி மாநிலத் தலைவா் நாகராஜ், மாநில துணைத் தலைவா் மலா்கொடி தா்மராஜ், பாஜக மாநிலப் பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.