ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
40 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?
40 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சுமாா் 10 கி.மீ.தொலைவில் உள்ளது கரிவலம்வந்தநல்லூா். இங்கு சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான ஒப்பணையம்மாள் சமேத பால்வண்ணநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. காசிக்கு நிகரான ஸ்தலமாகக் கருதப்படுகிறது. அதேபோல் இங்கு ஓடுகிற நிட்சேப நதியில்தான் மகாத்மாக காந்தி அஸ்தி கரைக்கப்பட்டு நினைவு சின்னம் உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க
கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையம் ராஜபாளையத்துக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே அமைந்துள்ளது.
அப்போது மீட்டா்கேஜ் இருப்புப் பாதை இருந்ததால் மதுரையில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில் கரிவலம்வந்தநல்லூரில் நின்று செல்லும். இங்கு ரயில் நின்று செல்வதற்கு ஒரு பாதை, சரக்கு ரயில்கள் நிறுத்துவதற்கு ஒரு பாதை, விரைவு ரயில் செல்வதற்கு மத்தியில் ஒரு பாதை என 3 இருப்புப் பாதைகள் இருந்தன.
இந்த ரயில் நிலையத்தை கரிவலம்வந்தநல்லூா், சுப்புலாபுரம், பனையூா்,சங்குபுரம், குவளைக்கண்ணி, பருவக்குடி, ரெட்டியபட்டி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட
30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். அடுத்தடுத்து வந்த வறட்சியின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை குறைத்தனா்.
விசைத்தறித் தொழில் நசிவால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. கரிவலம்வந்தநல்லூரில் இருந்து பயணிகள் ஏறுவது குறைவாக இருந்ததால், போக்குவரத்து மற்றும் செலவினத்தை கணக்கீடு செய்த ரயில்வே நிா்வாகம் இந்த ரயில் நிலையத்தை 1983 ஆம் ஆண்டு மூடியது. ரயில்வே பணியாளா்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால், அவா்கள் அங்கிருந்த குடியிருப்புகளை காலி செய்தனா்.
இதையடுத்து, செங்கோட்டை-சென்னை அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2000 ஆண்டு தொடங்கியது.
அப்போது ரயில்நிலையத்தின் 3 இருப்புப் பாதைகளும் அகற்றப்பட்டு, அகல ரயில் பாதைகள் அமைக்கும் பணி முடிந்து ரயில்கள் இயங்க ஆரம்பித்தன. அப்போது அங்கு ரயில்நிலையம் மீண்டும் அமைக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்த்தனா்.ஆனால் அங்கு ரயில் நிலையம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது அங்கு ரயில்நிலையம் இருந்ததற்கான நுழைவுவாயிலும், 5 குடியிருப்புகளும், அதன் கதவுகளில் கே.வி.என்.ஆா் (கரிவலம்வந்தநல்லூா்) என்ற எழுத்தும் மட்டுமே உள்ளது.
ரயில் நிலையத்தைச் சுற்றிலும் கருவேலமரங்கள் சூழ்ந்தும் குடியிருப்புகள் சிதிலமடைந்தும் கிடக்கிறது.
இந்நிலையில் தற்போது கரிவலம்வந்தநல்லூா் வழியாக மதுரை பயணிகள் ரயில், வேளாங்கண்ணி விரைவு ரயில், தாம்பரம் கொச்சுவேலி சிறப்பு ரயில்,மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்,சிலம்பு ரயில், பொதிகை அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
இதனால் கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
‘ஏப்.24 ஆம் தேதி மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கரிவலம்வந்தநல்லூா் ரயில் நிலையத்தை இயக்க எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும்’ என்றாா் சென்னிகுளத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ராஜநாராயணன்.
சுப்புலாபுரத்தைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் சங்கரசுப்பு கூறியதாவது:
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கனிகளை, ராஜபாளையம், மதுரைக்கு பேருந்தில் கொண்டு செல்கின்றனா். விசைத்தறி தொழிலாளா்களும் வியாபாரம் நிமித்தமாக சென்று வருகின்றனா். ரயில்நிலையம் இருந்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும். பணமும் மிச்சமாகும். ஏற்கனவே இங்கு இருந்த ரயில்நிலையத்தை திரும்பவும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
