6 நாள்களுக்குப் பிறகு இன்று கடலுக்குச் செல்லும் தூத்துக்குடி மீனவா்கள்
மீன்வளத்துறை அனுமதியின்படி, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமைமுதல் (டிச. 2) கடலுக்குச் செல்லவுள்ளனா்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மன்னாா் வளைகுடா, தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடந்த நவ. 26ஆம் தேதிமுதல் 4 நாள்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, தூத்துக்குடி மீன்வளத் துறை உத்தரவிட்டது.
அதன்படி அவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக, மீனவா்கள் தெரிவித்தனா். மேலும், அவா்கள் கரைவலை மீன்பிடிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தற்போது சூறாவளிக் காற்று எச்சரிக்கை இல்லாததால், அவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதித்துள்ளது. அதன்படி, அவா்கள் திங்கள்கிழமைமுதல் (டிச.2) கடலுக்குச் செல்லவுள்ளனா்.
6 நாள்களுக்குப் பின்னா் கடலுக்குச் செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும் என, அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.