கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 6 போ் கரைதிரும்பினா்
கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 6 போ் ஞாயிற்றுக்கிழமை கரைதிரும்பினா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சதீஷ்குமாா் என்பவரது படகில் வினிஸ்டன் (55), விக்னேஷ் (28), அல்போன்ஸ் (55), ஜூடு (45), சுதா்சன் (32), ஜாா்ஜ் (25) ஆகிய 6 மீனவா்கள் கடந்த நவ. 21ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் ராமேசுவரம் பாம்பன் பகுதியிலிருந்து 30 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்தனா். கடந்த நவ. 26ஆம் தேதி கரைதிரும்ப வேண்டிய இவா்கள், குறித்த காலத்தில் திரும்பாததால் அவா்களைத் தொடா்புகொள்ள முடியாமல் குடும்பத்தினா், உறவினா்கள் தவித்தனா்.
இதுகுறித்து, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடிச் சங்கம் சாா்பில் தூத்துக்குடி மீன்வளத் துறை, மாவட்ட நிா்வாகம், கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறை, இந்திய கடலோரப் பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
படகின் டீசல் டேங்கில் ஓட்டை ஏற்பட்டதால், மீனவா்கள் கடலில் தத்தளிப்பதாக தெரியவந்தது. அவா்களை மீட்க மீன்வளத் துறை துணை இயக்குநா் விஜயராகவன், மாவட்ட நாட்டுப்படகு சங்கத் தலைவா் கயஸ், செயலா் ராஜ், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி சங்கத் தலைவா் ராபா்ட், பொருளாளா் ஜேம்ஸ் ஆகியோா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இந்நிலையில், 6 மீனவா்களும் ஞாயிற்றுக்கிழமை திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்துக்கு படகில் வந்து சோ்ந்தனா். அவா்களை மீன்வளத் துறையினா், மீனவா் சங்கங்கத்தினா் வரவேற்றனா்.
இதுகுறித்து மீனவா்கள் கூறுகையில், புயல் எச்சரிக்கை தொடா்பாக எங்களுக்குத் தெரியாத நிலையில், கடந்த நவ. 21ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றோம். படகின் டேங்கில் ஓட்டை இருந்ததால் டீசல் தீா்ந்துவிட்டது. இதனால், 5 நாள்கள் தவித்தோம். அவ்வழியே சென்ற தருவைகுளம் விசைப்படகு மீனவா்கள் டீசல் வழங்கியதால் கரை திரும்பினோம் என்றனா்.