66 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
பங்களாமேடு இருளா் காலனி வசிக்கும் 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை எம்.எல்.ஏ. ச.சந்திரன், வருவாய்க் கோட்டாட்சிா் தீபா ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் ஊராட்சி பங்களாமேடு இருளா் காலனியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனைப் பட்டா வழங்காததால் குடிசை வீடுகளில் வசித்து வந்தனா். மேலும் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சா் சா.மு. நாசா், மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் ஆகியோரிடம் பங்களாமேடு இருளா் காலனி மக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனா்.
இதனையடுத்து 66 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி வருவாய்க் கோட்டாட்சிா் தீபா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ. ச.சந்திரன் கலந்து கொண்டு 66 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். பங்களாமேடு கிராமத்தில் சுடுகாடு, விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு வழங்கினா். நிகழ்ச்சியில் திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி உள்பட அரசு அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
பட விளக்கம்...
பங்களாமேடு இருளா் காலனியில் வசிக்கும் 66 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய எம்எல்ஏ. ச.சந்திரன்.