பராமரிப்பு பணிகள் - வரும் 17ம் தேதி புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
700 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்ட ஈரானியப் படகு! 8 பேர் கைது
குஜராத்தில் நடுக்கடலில் 700 கிலோ போதைப்பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த படகு பிடிபட்டது.
போதைப்பொருள் கடத்தலில், 700 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஈரானியப் படகு குஜராத்தின் போர்பந்தரில் இரவோடு இரவாக நடுக்கடலில் பிடிபட்டது. அதிலிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், போதைப்பொருளின் தன்மையைக் கண்டறியவும், அதிகளவிலான போதைப்பொருள் எங்கு கொண்டுச் செல்லப்பட்டது என்பதைக் கண்டறிவதற்கான விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்பந்தர் கடலில் குஜராத் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லை கோடு அருகே வந்தபோது ரேடாரில் படகு சிக்கியதால் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கான கடல்வழிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் மற்றும் போதைப்பொருள்கள் குறித்து தேடுதல்கள் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குஜராத்தில் இந்தளவுக்கான போதைப்பொருள்கள் பிடிபடுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக, மூன்று வாரங்களுக்கு முன் பாருச் மாவட்டத்தில் அங்கலேஸ்வரில் ரூ.250 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று அங்கலேஸ்வரில் ஆவ்கர் மருந்து விற்பனை நிறுவனத்தில் இருந்து ரூ.5,000 கோடிக்கும் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.