பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
74 வயதிலும் சூப்பர் ஒன்! ரஜினிக்கு மட்டும் எப்படி சாத்தியமானது?
இன்று நடிகர் ரஜினிகாந்த்தின் 74-வது பிறந்த நாள்.
சினிமாவுக்குள் எப்போதும் ஒரு பேச்சு உண்டு. என்ன திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும்; என்ன அதிர்ஷ்டம் இருந்தாலும் ஒழுக்கம் வேண்டும். மற்ற துறைகளில் எப்படியோ ஆனால் சினிமாவில் உச்சம், வீழ்ச்சி எல்லாவற்றையும் 10 ஆண்டுகளில் பார்த்துவிடலாம்.
அதற்குமேல் தாக்குப்பிடிப்பவர்கள் எப்போதும் இத்துறையில் உழன்றபடியே இருப்பார்கள். நடிகர் ரஜினிகாந்த்தும் கொஞ்சம் அதிர்ச்சி, நிறைய ஆச்சரியமாகவே இன்றும் நீடிக்கிறார்.
அபூர்வ ராகங்கள் படத்திலிருந்து கூலி வரை கடந்த 49 ஆண்டுகள் சினிமா வாழ்வில் சில இறக்கங்களைத் தவிர்த்து எப்போதும் ஏறுமுகத்திலேயே இருந்திருக்கிறார் ரஜினி. இத்தனையாண்டு வளர்ச்சியும் வசூலும் இந்தியளவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லை. உலகளவில் ரசிகர்களை வைத்திருப்பதும் முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு இழுத்துச் செல்ல ரஜினியால் முடிகிறது.
ரஜினிக்கு கதையைவிட ஒரு காட்சி எப்படி ரசிகர்களிடம் சென்றுசேரும் என்கிற நுட்பம் தெரியும் என்கின்றனர் அவருடன் பணியாற்றியவர்கள். அதனால்தான், சாதாரண காட்சிகளாக மாறக்கூடியவற்றில்கூட தன் உடல்மொழியால் வலுமிக்கதாக மாற்றுகிறார்.
இயக்குநர் கே. பாலச்சந்திரன் சிகரெட் பிடிக்கத் தெரியுமா? என்றே ரஜினியிடம் கேட்டிருக்கிறார். அவ்வளவு பெரிய இயக்குநர் நடிகராக விரும்பும் ஒருவரிடம் இப்படி கேட்டால் என்ன செய்வார்கள்? உடனே தெரியும் என்பார்கள் இல்லையென்றால் கற்றுக்கொள்கிறேன் என்பார்கள்.
ஆனால், ரஜினி ஸ்டைலாக கே.பி. முன் வாயில் தூக்கிப்போட்டு பற்றவைத்திருக்கிறார். சூழலுக்கேற்ப தன்னை திடீரென மாற்றுவதிலும் ரஜினி கைதேர்ந்தவர் என்பார்கள். இயக்குநர் ஷங்கர் எந்திரனுக்காக ரஜினியின் வில்லத்தனமான சிரிப்பை திரையில் காட்ட வேண்டுமென பாவனைகளை மாற்றி மாற்றி புதிய சிரிப்பைக் கேட்டிருக்கிறார்.
அப்படத்திற்கு முன் எத்தனை சிரிப்புகளை ரஜினி சிரித்திருப்பார்? ஆனால், எந்திரனில் தனித்துவனமான சிரிப்பு இருப்பதற்குக் காரணம் தலையை மேல்நோக்கி சிரித்தபடி தன் நெஞ்சில் குத்திக்கொள்ளும் காட்சிதான். ஸ்டைலாக மாறுவதைவிட தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களிலும் வித்தியாசங்களைக் காட்டியிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.
1979-ன் துவக்கத்திலிருந்து இறுதிவரை வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்திலிருந்து ஆறிலிருந்து அறுபது வரை மாற்றங்களுடனே இருந்திருக்கிறார். அதெல்லாம் இயக்குநர்களின் காலம் என்றாலும் எது சரியாக வரும் என்கிற நம்பிக்கை ரஜினிக்கு இருந்திருக்கிறதே! இப்படி ஆண்டுக்காண்டு ஒரு அதிரடி படத்தில் நடித்தால் சில குடும்பப் படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்குமான நடிகராக தன்னை மாற்றிக்கொண்டார். ஆச்சரியமாக பல கதைகளுக்குள் அந்த ஃபார்முலாவை கொண்டு வந்திருக்கிறார்.
இதையும் படிக்க: மனிதர்கள் மீதான பற்று..! மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியின் திரை உலகம்!
பாபா படத்தின் மிகப்பெரிய தோல்விக்குப் பின் என்ன நடந்தது? ரஜினி போன்ற சுறுசுறுப்பான நடிகர் ஒருவர் இரண்டு ஆண்டுகள் சும்மா இருந்தார். பொறுமையாக பல கதைகளைக் கேட்டு, மோகன்லால் நடித்த ’மனிச்சித்திரதாழு’ படத்தின் ரீமேக்கான சந்திரமுகி மூலம் யானை பலத்துடன் திரும்பி வந்தார். உண்மையில், சந்திரமுகி படம் ரஜினிக்கானது கிடையாது. ஆனாலும், அதை தன் படமாக அவர் மாற்றியது ஆச்சரியமானது.
மீண்டும் ஓராண்டு பொறுமையாக இருந்து சிவாஜி படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வசூலுடன் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். தென்னிந்தியாவின் முதல் ரூ. 100 கோடி வசூல் படம் இதுதான். இப்போது, ஆண்டிற்கு ஒரு படத்திலாவது நடிக்கிறார். சில சொதப்பல்கள் நிகழ்ந்தாலும் சூப்பர் ஸ்டார் படத்திற்கு இன்றுவரை பிரச்னை இல்லை.
கவனிக்க வேண்டிய இன்னொன்று, ரஜினி இன்றைய இளம் இயக்குநர்களுடன் ஈகோ இல்லாமல் இணைகிறார். அவர்கள் என்ன சொன்னாலும் செய்துகொடுக்கிறார். இயக்குநர்கள் பா. இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், ஞானவேல் என அனைவரும் தங்கள் நேர்காணல்களில் அதையே குறிப்பிடுகின்றனர். ’என்ன வச்சு புதுசா எதாவது செய்ங்க...’ என்பதே ரஜினியின் ஆர்வமாக இருக்கிறதுபோல.
முதலில் சொன்னதுபோல் தன் திறமை மற்றும் ஒழுக்கத்தைக் குறித்து ரஜினியே நிறைய இடங்களில் பேசியிருக்கிறார். தனக்கு பெரிதாக நடிக்க வராது என்றும் புகை, மதுப்பழக்கத்தால் உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டது என பல மேடைகளிலும் மிக வெளிப்படையாவகே தன் பலவீனங்களைப் பேசி பலமாக மாற்றிக்கொள்கிறார். இந்த தீய பக்கங்களால் திரையுலகம் ஏன் கைவிடவில்லை? உளவியலாகவே தன்னை கீழ் இழுத்து உச்சத்துக்கு ஏறியவர் ரஜினி.
அதிர்ஷ்டமோ திறமையோ... ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம் என்பதுபோல் தன் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகிறவருக்கு வாழ்த்துகள்!