78 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பன் மறைவிட கிராமத்துக்கு மின்சாரம்!
நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு, பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலாறு ஹதி என்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள 75 வீடுகளுக்கு முதல்முறையாக மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மறைந்த வீரப்பன் இரு மாநில காவல்துறையினரிடம் இருந்து மறைந்து வாழ்கிராமங்களில் ஒன்று பாலாறு ஹதி. பாலாறு கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு மின்சாரம் கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால், மின்சார கம்பங்கள், வயர்களால் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று வனத்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்தனர்.
இதனால், இரவு நேரங்களில் மண்ணெண்ணெய் விளக்குகளையே இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர். சேலம் மாவட்டம் கோவிந்தபாடி, கொளத்தூர் மற்றும் அருகாமை கிராமங்களில் இருந்து கள்ளச்சந்தையில் மண்ணெண்ணெய் வாங்கியும் பயன்படுத்தி வந்தனர்.
இருப்பினும், இருட்டின் காரணமாக தொடர்ந்து இரவு நேரங்களில் காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளால் கிராம மக்கள் பாதித்து வந்தனர்
இதையும் படிக்க : சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
இதேபோன்று, 22 கிராமங்கள் இப்பகுதியில் இருக்கும் நிலையில், அனைவரும் ஒன்று திரண்டு பலகட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரூ. 41 கோடியில் மின்விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
தற்போது, நிலத்தடி மின் கேபிள்கள் அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, அதற்கான பணிகள் நிறைவடைந்து, பாலாறு ஹதி கிராமத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அனைத்து கிராமங்களுக்கும் நிலத்தடி மின் கேபிள்கள் மூலம் மின்சாரம் விநியோகிக்க வனத்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.