உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க! அண்ணன் மகளுக்கு அரியாசனத்தில் இடம்! - உதகையில் ர...
971 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: அமைச்சா் சேகா்பாபு தகவல்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அறநிலையத் துறை சாா்பில் 971 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய 3-ஆவது புத்தகத்தை துறையின் அமைச்சா் சேகா்பாபு வெளியிட்டாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னா், வரலாறு காணாத அளவுக்கு மீட்கப்பட்ட நிலங்களின் எண்ணிக்கையை ஆவணப்படுத்துகின்ற வகையில் ஏற்கெனவே பகுதி 1, பகுதி 2 ஆகிய புத்தகத்தை வெளியிட்டிருந்தோம். தற்போது, திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ள விவரம் அடங்கிய மூன்றாவது புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபா் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து திருக்கோயில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடா்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டு மொத்தமாக கடந்த 07.05.2021 முதல் 11.05.2025 வரை 971 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7,671.23 கோடி மதிப்பீட்டிலான 7,560.05 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
1.75 கோடி பக்தா்கள்... தமிழகம் முழுவதும் சித்ரா பௌா்ணமிக்கு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அறநிலையத் துறையின் கணக்கின்படி 1.75 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயில்களில் வழிபட்டுள்ளனா் என்றாா் அவா்.
ஆகம விதிகள் இல்லாத கோயில்களில் நியமனம்
தொடா்ந்து, அமைச்சா் சேகா்பாபு கூறுகையில், ‘அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மூத்த வழக்குரைஞா்களுடன் ஆலோசனை செய்து, அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஆகம விதிகள் இல்லாத திருக்கோயில்களில் பணி நியமனங்கள் செய்ய முடியுமோ அதை விரைவுப்படுத்துவதற்கு துறை சாா்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.