லஷ்கர்-இ-தய்பாவின் சேதமடைந்த வசிப்பிடங்களில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு த...
தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!
புது தில்லி: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடா்ந்தது.
வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்தத் தனிப்பட்ட வழக்குடன், சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசம் குறித்தும், காலக்கெடுவுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் அதற்கான சரியான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசிற்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பின் 201-வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் வழக்கில் மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகளுக்கு கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.
மே 18 இல் விண்ணில் பாய்கிறது ரிசாட் -1பி செயற்கைக்கோள்!
1. பிரிவு 200-இன் கீழ் ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?
2. ஒரு மசோதா ஆளுநர் அனுப்பி வைக்கப்படும்போது, அவருக்கு இருக்கும் அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்சரவை வழங்கும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா?
3. பிரிவு 200-இன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
4. பிரிவு 200-இன் கீழ் ஒரு ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு, பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?
5. அரசியலமைப்பு ரீதியாக காலக்கெடு இல்லாவிட்டாலும், சட்டப்பிரிவு 200-இன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்காக, நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?
6. பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது மறுஆய்வுக்கு உட்பட்டதா? நியாயப்படுத்தத்தக்கதா?
7. பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
8. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும்போது, பிரிவு 143-இன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
9. பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகள், அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நீதித்துறையால் 200 மற்றும் 201 இன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவுகள் நியாயப்படுத்தப்படுமா?
10. பிரிவு 142 இன் மூலம் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?
11. பிரிவு 200 இன் கீழ் மாநில சட்டப்பேரவையால் இயற்றப்படும் மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாகுமா?
12. உச்ச நீதிமன்றத்தின் எந்த அமர்வும் முதலில் ஒரு வழக்கில் கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதைத் தீர்மானித்து, பிரிவு 145(3) இன் கீழ் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?
13. பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தை அனுமதிக்கிறதா?
14. அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின், ஆளுநரின் அதிகாரங்கள் பிரிவு 142-இன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
மேற்கண்ட கேள்விகளை எழுப்புவதன் மூலம், குடியரசுத் தலைவர் நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் அரசியலமைப்பு எல்லைகள் குறித்து தெளிவுபடுத்த முயற்சிக்கிறார், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் நீதித்துறை விளக்கத்தின் அவசியத்தை வலுப்படுத்துகிறது.
மேலும், இந்த விளக்கத்தை குடியரசுத் தலைவர் முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.