பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம் - துருக்கி அதிபர்
இஸ்தான்புல்: பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற தீவிர சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை தாக்க ட்ரோன்களை பயன்படுத்தியது. பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் துருக்கியிலிருந்து அந்நாட்டுக்கு வழங்கப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், பாகிஸ்தானுகு துருக்கி ராணுவ உதவி புரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது. ஆனால், துருக்கியில் இருந்து கராச்சிக்கு 6 டி-130இ ஹொ்குலஸ் விமானங்கள் வந்ததாகக் வான்வழியாக விமானங்கள் பறப்பதைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததால் துருக்கி இந்தியர்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.
துருக்கிக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக இந்தியர்கள் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்நாட்டின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் பலர், துருக்கிக்கு செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். அந்நாட்டு பொருள்களை வாங்க வேண்டாமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்புக்கு அனுப்பியுள்ள செய்தியில், பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் எப்போதும் துணை நிற்போம் என்று உறுதியளித்திருக்கிறார்.