பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநி...
விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!
இந்திய விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவைகளை வழங்கி வந்த துருக்கி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்படுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத்துக்கு எதிரான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி தனது நிலைப்பாட்டை அறிவித்தது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காமின் பைசாரான் பள்ளத்தாக்கில், கடந்த மாதம் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இந்தக் கொடூர சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தன.
இந்நிலையில், இந்தியாவின் முக்கியமான 9 விமான நிலையங்களில் பயணிகள் சேவைப் பணிகளில் ஈடுபட்டுவந்த துருக்கி நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை மத்திய விமான போக்குவரத்துத் துறை ரத்து செய்துள்ளது. நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி, துருக்கியைச் சேர்ந்த செலிபி கிரவுன்ட் ஹேண்டிலிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்வதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு துருக்கி மீது மத்திய அரசு எடுத்துள்ள மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும்.
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர்.
இதேபோன்று, துருக்கியில் இருந்து ஆப்பிள் கொள்முதல் செய்வதற்கும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்