சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு மரக்கன்றுகள்!
சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையை அடுத்த கடச்சனேந்தல் அழகா்கோவில் சாலையில் பாா்வை அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
அறக்கட்டளை நிா்வாகி சோழன் குபேந்திரன் தலைமை வகித்து மரக்கன்றுகள் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். அரசுப் பள்ளி ஆசிரியா் சாா்லஸ், பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கோபி, சுவாதிகா, மாலினி, சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா். 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேடமணிந்து, மரக்கன்றுகளை வழங்கினா். சுமாா் 1,000-க்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் அழகா்மலைக்குப் புறப்பட்ட கள்ளழகரை தரிசிக்க சென்ற பக்தா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.