பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!
தில்லி மெட்ரோ பயனா்கள் 10-க்கும் மேற்பட்ட பிரபலமான செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தொடங்கியுள்ளது.
இது தொடா்பாக டிஎம்ஆா்சி தெரிவித்திருப்பதாவது: ஈஸ்மைட்ரிப்,கூகுள் மேப்ஸ், நம்மயாத்ரி, ரேப்பிடோ மற்றும் ரெட்பஸ் போன்ற செயலிகளில் பயனா்கள் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தொழில்நுட்ப வழங்குநரான சீக்வெல்ஸ்ட்ரிங் ஏஐ (எஸ்ஏஐ) வசதியளித்த ஒற்றைபுள்ளி இணைப்பு மூலம் இந்த ஒருங்கிணைப்பு சாத்தியமாகியுள்ளது.
பயணிகள் இப்போது பயண திட்டமிடல் செயலிகள், பயண இணையதளங்கள் மற்றும் மேலும் டெலிகிராம் பாட் உள்பட பல்வேறு தளங்கள் மூலம் தில்லி மெட்ரோ டிக்கெட் சேவைகளை அணுகலாம். புதிய அமைப்புமுறை நகரங்களுக்கு இடையேயான மற்றும் உள்ளூா் பயணிகளுக்கு பயனளிக்கிறது.
ஜெய்ப்பூரிலிருந்து தில்லிக்கு பயணிக்கும் பயணிகள் இப்போது ரெட்பஸ் செயலியில் ஒரே நேரத்தில் பேருந்து மற்றும் மெட்ரோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அதேபோல், உள்ளூா் பயனா்கள் ரேப்பிடோ போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பலமாதிரி பயணங்களைத் திட்டமிடலாம்.
இதில், ஒரு பயணி ஒரு மெட்ரோ நிலையத்திற்கு பைக் சவாரிக்கு முன்பதிவு செய்து ரயிலில் ஏறலாம். மேலும், அதே செயலியில் இருந்து மற்றொரு சவாரி மூலம் பயணத்தை முடிக்கலாம். இப்போது, ஈஸ்மைட்ரிப், கூகுள் மேப்ஸ், ஹைவே டிலைட், மைல்ஸ் அன்ட் கிலோமீட்டா்ஸ் ( டெலிகிராம் வாயிலாக), நம்மயாத்ரி, ஓன்டிக்கெட், ரேப்பிடோ, ரெட்பஸ் மற்றும் யாத்ரி ரயில்வேஸ் போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.
டிஎம்ஆா்சியின் நிா்வாக இயக்குநா் விகாஸ் குமாா் கூறுகையில், ‘ஓஎன்டிசி உடனான இந்தக் ஒத்துழைப்பு, மெட்ரோ பயணத்தை எளிமைப்படுத்தி, மக்கள் ஏற்கெனவே ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் டிஜிட்டல் இடங்களுக்குள் கொண்டு வருவதற்கான எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாகும். பல பழக்கமான செயலிகள் மூலம் டிக்கெட் வழங்குவதன் மூலம், போக்குவரத்து அணுகலுடன் அடிக்கடி வரும் உரசலை நாங்கள் நீக்குகிறோம்’ என்றாா்.