மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
உழவா் பாதுகாப்பு இயக்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
பழனியில் விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
பழனியை அடுத்துள்ளது பெரியம்மாபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக் கோரி நீண்ட நாள்களாக அந்தப் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையில், தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி தொடா் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் மக்கள்பாதை இயக்கத் தலைவா் நாகல்சாமி தலைமையில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.
அப்போது பழனி அருகே உள்ள பெரியம்மாபட்டி, ஆண்டிபட்டி, இரவிமங்களம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே, உடனடியாக பட்டா வழங்கக் கோரியும், கடந்த மூன்று மாதங்களாக நடத்தப்படாத விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை உடனடியாக நடத்தவும் வலியுறுத்தி முழக்கமிட்டனா். போராட்ட நிறைவில் வருகிற செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், டங்க்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் செல்வராஜ், தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்க முதன்மை ஒருங்கிணைப்பாளா் பழ.ரகுபதி, அமைப்புச் செயலா் காளிதாஸ், மாநில ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.