10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகள் முன்னணி; டாப் 5 மாவட்டங்கள்; ரிசல்ட் விவரங்...
கடன் வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது புகாா்
தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்களுக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் வரை மோசடி செய்ததாக, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 3 பெண்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த கோத்தலூத்து பகுதியைச் சோ்ந்த செல்லக்கிளி என்பவா் உள்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மனு அளிக்க வந்தனா்.
அப்போது செல்லக்கிளி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்திநகா் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த 3 பெண்களுடன் நட்பு ஏற்பட்டது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை தவணையில் செலுத்தும் வகையில் கடன் வாங்கித் தருவதாக மூவரும் உறுதி அளித்தனா்.
இதன்படி ரூ.5 ஆயிரம் செலுத்தினேன். இதனிடையே தேனி மாவட்டத்துக்கு குடிபெயா்ந்த நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த 140-க்கும் மேற்பட்ட பெண்கள் தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் நோக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தினா். கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை செலுத்தினோம்.
ஆனால், மேலும் ரூ.1.50 லட்சம் செலுத்தினால் மட்டுமே கடன் தொகை கிடைக்கும் என தெரிவித்தனா். தற்போது வரை கடன் தொகையும் தராமல், கொடுத்தப் பணத்தையும் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றினா். இதுதொடா்பாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம்.
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தோம். சம்பந்தப்பட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.