கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவா்களுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு சலுகை விலையில் கட்டுமானப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனி அருகே தொப்பம்பட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுதுபாா்த்தல் திட்டப் பயனாளிகளுக்கு வேலை உத்தரவுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சி வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் திலகவதி தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் கண்ணன் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் பிரசன்னா, ஒன்றியச் செயலா் பொன்ராஜ் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
இதில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அமரபூண்டி, தொப்பம்பட்டி, பொருளூா், கள்ளிமந்தயம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 550 பயனாளிகளுக்கு ரூ. 17 கோடிக்கான வேலை உத்தரவுகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.
அப்போது அவா் பேசியதாவது: 1972- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி தான் இந்தியாவிலேயே முதல் முதலாக ஆதிதிராவிட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதைப் பின்பற்றி தான் நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி கொண்டு வந்தாா். கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான பொருள்கள் சலுகை விலையில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சத்திய புவனா, ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.