பெண் அதிகாரிகள் தலைமையில் செயல்படும் 43% காவல் நிலையங்கள்! - துணை முதல்வா் உதயநி...
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்தக் கோரிய டிரம்ப்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றுப் பேசியபோது, டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐபோன்களின் தயாரிப்பு மையமாக இந்தியா உள்ள நிலையில், டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளது இந்தியாவில் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற வணிக மாநாட்டில் இன்று (மே 15) பேசும்போது, அமெரிக்க பொருள்களுக்கான வரியை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது, ''அவர்கள் (இந்தியா) எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். அதில், எங்கள் பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம். சீனாவில் நீங்கள் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அவர்களை கவனித்துக்கொள்ளும்'' என டிம்மிடம் கூறியதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.
டிம் இவ்வாறு அறிவித்த சில வாரங்களில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த வணிகத்தைப் பயன்படுத்தியதாக டிரம்ப் கடந்த திங்கள் கிழமை (மே 12) கூறியிருந்தார். போரை நிறுத்தவில்லை என்றால், இரு நாடுகளுடனும் எந்தவித வணிகமும் நடைபெறாது என அவர் எச்சரித்திருந்தார்.
உலக அளவிலான செல்போன் உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 76.6%ஆக உள்ளது. வியட்நாம் 9.9%, இந்தியா 8.4% மற்றும் தென்கொரியா 1.2%.
எஸ்&பி குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத் தரவுகளின்படி, 2024 டிசம்பர் முதல் 2025 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 81.9% ஐபோன்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. 2025 மார்ச் மாதத்தில் இந்த விகிதம் 97.6%ஆக உயர்ந்துள்ளது.
2024ஆம் ஆண்டில் மட்டும் 7.59 கோடி ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் விற்பனை செய்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 31 லட்சம் ஐபோன்கள் ஏற்றுமதியாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!