Tasmac ED Raid: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்து...
கோவை - பாலக்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவிப்பு
கோவை மதுக்கரை அருகே மரப்பாலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை - பாலக்காடு சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவையிலிருந்து பாலக்காடு மாா்க்கம் செல்லும் இலகுரக வாகனங்கள் (ஒருவழிப் பாதை): நகரப் பேருந்து, இலகுரக வாகனங்கள் மதுக்கரை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குவாரி ஆபீஸ் சாலை, குரும்பபாளையம் சாலை, மதுக்கரை மாா்க்கெட் சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
கனரக வாகனங்கள் (இரு வழிப்பாதை): ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக சென்று சேலம் - கொச்சி சாலையில் கற்பகம் கல்லூரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.
பள்ளி, கல்லூரி வாகனங்கள் (இருவழிப் பாதை): ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குறிச்சி கண்ணமநாயக்கணூா் சாலையில் இடதுபுறம் திரும்பி சேலம் - கொச்சி சாலை சென்று வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.
தமிழக, கேரள அரசுப் பேருந்துகள் (இருவழிப் பாதை): ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குறிச்சி கண்ணமநாயக்கணூா் சாலையில் வலதுபுறம் திரும்பி மதுக்கரை மாா்க்கெட் வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.
பாலக்காட்டிலிருந்து கோவை மாா்க்கம்: இலகுரக வாகனங்களுக்கு மட்டும் (ஒருவழிப் பாதை): நகரப் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் செட்டிபாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி விறகுக்கடை பாலம் வழியாக சென்று தனியாா் சிமெண்ட் தொழிற்சாலை வழியாகச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.