குழாய் மூலம் எரிவாயு திட்டம் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும்: ரேகா குப்தா
தில்லியில் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
துவாரகாவில் நடந்த விழாவில் தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவும், முதல்வரும் இணைந்து 111 கிராமங்களுக்குக் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகத்தைத் தொடங்கி வைத்தனர்.
தில்லியில் குழாய் மூலம் எரிவாயு இணைப்புகள் வழங்கும் வசதியை விரிவுபடுத்தும் திட்டத்தில், இரண்டாம் கட்டத்தின் கீழ் 111 கிராமங்களில் உள்ள அனைத்து குடும்பங்களின் வாழ்விலும் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழாய் மூலம் எரிவாயு இணைப்பில்லாத 116 கிராமங்களுக்கும் இந்தாண்டு இறுதிக்குள் அந்த வசதி செய்யப்படும். இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் மொத்தம் 130 கிராமங்களுக்குக் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இன்று 111 கிராமங்களுக்குக் குழாய் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதன் மூலம், நகரத்தில் மொத்த குழாய் இணைப்பின் நீளம் 13 ஆயிரம் கி.மீ ஆக உயர்ந்துள்ளது. குழாய் எரிவாயு விநியோக திட்டத்தினால் பெண்களின் ஆரோக்கியம் மேம்படவும், சுற்றுச்சூழலை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
ஒரு இல்லத்தரசியாகச் சமையல் எரிவாயு சிலிண்டரில் திடீரென எரிவாயு தீர்ந்துவிடுவது போன்ற சிக்கல்களை நான் சந்தித்திருக்கிறேன். குழாய் எரிவாயு திட்டத்தின் மூலம் கிராமங்களில் இதுபோன்ற பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரும்.
நாட்டில் 2014 வரை ஏழைகளுக்குச் சிறிய வசதிகள்கூட கிடைக்காமல் இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உஜ்வாலா திட்டத்தை மக்களுக்காகக் கொண்டுவந்தார்.
தனது அரசு பசுமை முயற்சிகளை எடுத்துரைத்த ரேகா குப்தா, 3 லட்சம் சூரிய மின் நிலைய அலகுகளை நிறுவுவதற்கான தனது அரசின் உறுதியையும், சமீபத்தில் 400 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்தியதையும் அவர் எடுத்துரைத்தார்.
2022ஆம் ஆண்டு வரை தில்லியில் உள்ள கிராமப்புற மக்களில் 30 சதவீதம் பேர் விறகு அடுப்புகளை நம்பியிருந்ததாக ஐ.நா கணக்கெடுப்பு காட்டுவதாக அவர் கூறினார்.