`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!' - ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஶ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது...
"உங்களை (ராணுவ வீரர்கள்) காண்பதில் நான் பெருமை கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஆபரேஷன் சிந்தூரில் நீங்கள் செய்த அனைத்தின் குறித்தும் ஒட்டுமொத்த நாடுமே பெருமை கொள்கிறது.
நான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆவதற்கு முன்பு நான் ஒரு இந்தியக் குடிமகன். பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தாலும், ஓர் இந்தியக் குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளேன்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு & காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளிடம் கோபம் காட்டிய விதத்திற்காக ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்.
நான் இங்கு எதிரிகளை அழித்த எனர்ஜியை உணர வந்துள்ளேன். நீங்கள் (ராணுவ வீரர்கள்) பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு கொடுத்த பதிலடியை அவர்களால் எப்போதுமே மறக்க முடியாது.
தீவிரவாதம் என்னும் நோய்க்கும், ஆபரேஷன் சிந்தூர் போன்ற மருத்துவம் நிச்சயம் அவசியம்" என்று கூறினார்.
சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்தது தொடர்பாக பேசுகையில்...
"நமது நாடு சர்வதேச நாணய நிதியத்திற்கே கடன் வழங்கும் பட்டியலில் இருக்கிறது. அப்போது தான், சர்வதேச நாணய நிதியம் ஏழை நாடுகளுக்கு கடன் வழங்க முடியும். ஆனால், பாகிஸ்தான் இன்னும் கடன் வாங்கி கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
இதை குறிக்கையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் படம் ஒன்றின் வசனமான, "பாகிஸ்தான் எங்கு நிற்கிறதோ, அங்கே இருந்து யாசகர்களின் வரிசை தொடங்குகிறது" என்பதை மேற்கோள்காட்டினார்.