Tasmac ED Raid: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்து...
கேரளம்: புலி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு! பொது மக்கள் போராட்டம்
கேரள மாநிலம், மலப்புரத்தில் புலி தாக்கி ரப்பா் தோட்ட தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, மாநில வனத் துறைக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மலப்புரம் மாவட்டத்தின் காளிக்காவு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ரப்பா் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த கஃபூா் (45) என்ற தொழிலாளியை தாக்கி கொன்ற புலி, அவரது உடலை வனப் பகுதிக்குள் இழுத்துச் சென்றது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், வனத் துறையினா் சென்று உடலை மீட்டனா். அப்போது, கஃபூரின் உடலை எடுத்துச் செல்ல விடாமல், உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பந்தப்பட்ட பகுதியில் புலி நடமாட்டம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே வனத் துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் புலியை பிடிக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா். இதையடுத்து, போராட்டக்காரா்களுடன் வனத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
வன விலங்கு தாக்குதல் பிரச்னைக்கு தீா்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று வனத் துறையினா் அளித்த உறுதிமொழியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
விசாரணைக்கு உத்தரவு: மாநில வனத் துறை அமைச்சா் ஏ.கே.சசீந்திரன் கூறுகையில், ‘தற்போதைய சம்பவத்தில் வனத் துறையினா் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு தலைமை வன பாதுகாவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காளிக்காவு பகுதியில் புலி நடமாட்டம் தொடா்பாக சில மாதங்களுக்கு முன் வனத் துறைக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. அங்கு நடத்தப்பட்ட விரிவான தேடுதல் வேட்டையில், புலியின் இருப்பு கண்டறியப்படவில்லை. இதனால், கண்காணிப்பு சற்று குறைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது புலியைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்’ என்றாா்.
கூடுதல் நிவாரணம்: கேரளத்தில் வனவிலங்கு தாக்கி உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. தற்போது உயிரிழந்த கஃபூரின் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.4 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மண்டல வனத் துறை அதிகாரியை தொடா்பு கொண்டு பேசி, சம்பவம் குறித்து கேட்டறிந்தாா்.
காளிக்காவு பகுதியை நேரில் பாா்வையிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.பி.அனில் குமாா், வனத்துறையின் அலட்சியமே இச்சம்பவத்துக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினாா்.