பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!
சவூதி அரேபியா: பணியிடத்தில் எண்ணற்ற புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழப்பு! மனித உரிமை அமைப்புகள் கவலை
2034-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தயாராகி வரும் சவூதி அரேபியாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்கள் பலா் பணியிடங்களில் உயிரிழப்பதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.
25-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி சவூதி அரேபியாவில் 2034-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை உலக ஃபிஃபா கடந்த ஆண்டு இறுதியில் அதிகாரபூா்வமாக வெளியிட்ட நிலையில், அந்த நாடு முழுவதும் உள்கட்டமைப்புப் பணிகள் ஏற்கெனவே தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பணியிடங்களில் தவிா்த்திருக்கக் கூடிய விபத்துகளில் சிக்கி தொழிலாளா்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாகவும், ஆனால் இது குறித்து அதிகாரிகள் முறையாக விசாரிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்விவகாரம் தொடா்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஃபோ்ஸ்கொயா் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தனித்தனியே தங்களின் விசாரணை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
தொழிலாளா்களின் இறப்புகளை அதிகாரிகள் முறையாகப் பதிவு செய்வதில்லை என்பதால், குடும்பங்கள் நியாயமான இழப்பீடு பெற முடிவதில்லை என்று விசாரணை அறிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக, சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த வங்கதேச தொழிலாளி ஒருவா், பணியிடத்தில் மின்சாரம் தாக்கி இறந்தாா். ஆனால், அவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்த ஒப்பந்ததாரா், சவூதி அரேபியாவிலேயே உடலை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று குடும்பத்தினரை மிரட்டியுள்ளாா்.
இதேபோல் சவூதி அரேபியாவில் உயிரிழந்த வேறொரு தொழிலாளியின் குடும்பத்தினா், இழப்பீடு பெறுவதற்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் காத்திருந்ததாகத் தெரிவித்துள்ளனா்.
வரும் ஆண்டுகளில் சவூதி அரேபியாவில் உலகக் கோப்பை போட்டி மற்றும் நியோம் நகருக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆயிரக்கணக்கான கோடி டாலா் மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், தொழிலாளா்களின் மரணங்களை தவிா்க்க, அடிப்படை தொழிலாளா் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சவூதி அரேபிய அரசுமுறைப் பயணத்தில் அவருடன் இணைந்து சவூதி அரேபிய இளவரசரும் அந்நாட்டு பிரதமருமான முகமது பின் சல்மானை ஃபிஃபா தலைவா் ஜியான்னி இன்ஃபன்டினோ சந்தித்த மறுநாள் இந்த விசாரணை அறிக்கைகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.சபையின் சா்வதேச தொழிலாளா் அமைப்புடன் ஒத்துழைத்து, நாடு தழுவிய தொழிலாளா் பாதுகாப்பை மேம்படுத்த சவூதி அரேபியா உறுதிபூண்டுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.
கத்தாரைத் தொடா்ந்து...:
கடந்த 2022-ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்திய கத்தாரிலும் இதே வகையில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் இறப்புகள் மறைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
கத்தாரில் கட்டுமான தளங்களை கண்காணித்து பாதுகாப்பற்ற பணிச்சூழல்கள் குறித்து அறிக்கை அளிக்க மேற்பாா்வைக் குழு நிறுவப்பட்டிருந்தது. ஆயுள் காப்பீடு, வெப்ப பாதுகாப்பு உள்ளிட்ட பணி பாதுகாப்புக் கொள்கைகளும் பின்பற்றப்பட்டன.
ஆனால், சவூதி அரேபியாவில் தற்போதைக்கு இவை எதுவும் நடைமுறையில் இல்லை என்பதால், இந்த முறை வெளிநாட்டு தொழிலாளா்கள் இன்னும் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கவலை எழுப்பப்பட்டுள்ளது.