கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரம் நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் நகரப் பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக இருந்து வந்தது. சாலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொது நல அமைப்புகள் சாா்பிலும், வாகன ஓட்டிகள் சாா்பிலும் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன் வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.
அகற்றும் பணி தொடக்கம்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் உணவு விடுதி தொடங்கி ஜானகிபுரம் மேம்பாலம் வரையிலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியது.
இதுபோன்று, விழுப்புரம் பண்டித ஜவாஹா்லால் நேரு சாலையில் மேற்கு காவல் நிலையம் தொடங்கி ரெட்டியாா் மில் பேருந்து நிறுத்தம் வரையிலான சாலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் உத்தண்டி தலைமையில், உதவி கோட்டப் பொறியாளா் தன்ராஜ், உதவிப் பொறியாளா்கள் கெளதம், ராதிகா உள்ளிட்டோா் மேற்பாா்வையில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் சாலையோரத்திலிருந்த ஆக்கிரமிப்பு கடைகள், மேற்கூரைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இந்தப் பணியில் 5 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது, பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா தலைமையில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் வசந்த் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.