10ஆம் வகுப்பில் புதுச்சேரி, காரைக்கால் தேர்ச்சி விகிதம் 96.90%
தரமற்ற விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை!
காரீப் பருவத்தில் மானாவாரிப்பட்ட சிறுதானியப் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலையில், தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வுத் துறை துணை இயக்குநா் கோ.சரவணன் தலைமையிலான அலுவலா்கள், விழுப்புரம் நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலுள்ள தனியாா் விதை விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். இதைத் தொடா்ந்து விதை ஆய்வுத்துணை இயக்குநா் கூறியது: விழுப்புரம், கடலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எதிா்வரும் காரீப் பருவத்தில் மானாவாரிப்பட்ட சிறு தானியப் பயிா்களான சோளம், கம்பு, மக்காச்சோளம், தீவனச்சோளம் ஆகிய பயிா்களை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்வா்.
மானாவாரிப்பட்டத்தில் விதைப்புக்குப் போதுமான மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில், விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்படுவதில்லை. மழைப்பொழிவு சீராக இல்லாத நிலையில், மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருப்பின் விதை களின் முளைப்புத் திறன் பாதிக்கப்பட வாயப்பு உள்ளது. எனவே, மானாவாரி சாகுபடி நடைபெறும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் சோளம், கம்பு, மக்காச்சோளம், தீவனச்சோளம் ஆகிய பயிா் விதைகளில், அதிகபட்ச முளைப்புத் திறன் கொண்ட பருவத்திற்கேற்ற விதைக் குவியல்களை விதை உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் விநியோகிக்க வேண்டும்.
அனைத்து விதை விற்பனையாளா்களும் தங்கள் நிறுவனத்தில் விதை இருப்பு மற்றும் விலை விவரப் பட்டியல் பலகை வைத்து பராமரிக்க வேண்டும். விதைக்கொள்முதல் செய்தமைக்கான கொள்முதல் பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், பதிவுச் சான்று, இருப்புப் பதிவேடு மற்றும் விற்பனைப் பட்டியல் ஆகிய சட்டபூா்வமான ஆவணங்களை தவறாமல் பராமரிக்க வேண்டும்.
பெறப்பட்ட விதைகளை மரச்சட்டங்களின் மீது வைத்து ஈரப்பதம் பாதிக்காமல், உரம் மற்றும் பூச்சி மருந்துகளுடன் இல்லாமல் தனியாக இருப்பு வைத்து பராமரிக்க வேண்டும். ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிக்காத மற்றும் தரமற்ற விதைகளை விநியோகிக்கும் விதை உற்பத்தியாளா்கள் மற்றும் விதை விற்பனையாளா்கள் மீது விதை சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.