திருவள்ளூர் மாவட்டத்துக்கு 36வது இடம்! பத்தாம் வகுப்பில் 89.60% தேர்ச்சி!
திருவள்ளூர்: தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கடந்தாண்டை விட 3.76 சதவீதம் அதிகம் என்பதோடு, மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல் வரையில் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 440 பள்ளிகளை உள்ளடங்கிய 147 தேர்வு மையங்களில் மாணவர்கள் 15,588, மாணவிகள் 15,717 என மொத்தம் 31305 பேர் பொதுத்தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 13,550, மாணவிகள் 14,499 பேர் என மொத்தம் 28,049 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட அளவில் மாணவர்கள் 86.93 சதவீதமும், மாணவிகள் 92.25 சதவீதமும் என மொத்தம் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் கடந்த கல்வியாண்டில் 86.52 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
அதேபோல், 2024 - 25 கல்வியாண்டில் 225 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 7838, மாணவிகள் 8265 என மொத்தம் 16,103 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 6,345, மாணவிகள் 7,313 என மொத்தம் 13,650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுவே தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 80.95, மாணவிகள் 88.48 என மொத்தம் 84.82 சதவீதம் ஆகும். இதுவே கடந்தாண்டில் 80.06 சதவீதமாகும். நிகழாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 36 இடம் பெற்றுள்ளது. இந்த மாவட்ட அளவில் 26 அரசு பள்ளிகள் உள்பட 97 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.