ஜம்மு - காஷ்மீர்: 3 நாள்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று நாள்களாக காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இருவேறு நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (மே 16) செய்தியாளர்களுடன் பேசிய ராணுவ உயர் அதிகாரி தனஞ்ஜய் ஜோஷி கூறுகையில், தெற்கு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் அம்மாநில காவல் துறையினர் இணைந்து நடத்திய இரண்டு முக்கிய நடவடிக்கைகளின் மூலம் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தும் ஷோப்பியன் மாவட்டத்தின் கெல்லார் மற்றும் புல்வாமாவின் ட்ரால் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இவை அனைத்தும் பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் சாத்தியமடைந்ததாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிக்க: ஜப்பானை பின்னுக்கு தள்ளியது இந்தியா!