நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி
வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பிரிட்டனில் இருந்து நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கான நடைமுறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன்பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.
இந்த முறைகேடு தொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தன. இந்தியாவில் இருந்த நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸியின் ரூ.3,319.52 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியாவில் பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நீரவ் மோடி, லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளாா்.
இதனிடையே, ஆன்டிகுவாவில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்துள்ள மெஹுல் சோக்ஸி கடந்த மாதம் கைது செய்யப்பட்டாா். இருவரையும் நாடு கடத்துவதற்கான பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி பிரிட்டன் நீதிமன்றங்களில் நீரவ் மோடி முன்னதாக தாக்கல் செய்த அனைத்து ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதன்தொடா்ச்சியாக, பிரிட்டன் உயா்நீதிமன்றத்தால் நீரவ் மோடியின் 4-ஆவது ஜாமீன் மனு வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
போலி நிறுவனங்கள் மூலம் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் நீரவ் மோடி பணமோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை வாதிட்டது. இருதரப்பு வாதத்துக்குப் பின்னா் மோசடியின் அளவைக் கருத்தில் கொண்டு, நீரவ் மோடிக்கு ஜாமீன் மறுத்து பிரிட்டன் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.