அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள்! - உயா்நீதிமன்றம் அதிருப்தி
உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படுவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி அதிருப்தி தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி உறுப்பினா் அய்யப்பன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தேரூா் பேரூராட்சிக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் திமுக சாா்பில் வாா்டு எண் 8-இல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதே பேரூராட்சியில் வாா்டு எண் 2-இல் பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பொது வாா்டில் அதிமுக சாா்பில் அமுதாராணி போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
தேரூா் பேரூராட்சித் தலைவா் பதவி பட்டியலின சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டது. எனவே, அமுதாராணி பேரூராட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் கிறிஸ்தவ மதத்தைச் சாா்ந்தவா். கடந்த 2005-இல் கிறிஸ்தவராக மதம் மாறி, கிறிஸ்தவா் ஒருவரைத் திருமணம் செய்தாா்.
இதை மறைத்து, தன்னுடைய பிறப்புச் சான்றிதழை உள்ளாட்சித் தோ்தலின் போது அளித்து தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். வேறு மதத்துக்கு மாறியவுடன், அவா் பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் பலனைப் பெற முடியாது.
கிறிஸ்தவரான அமுதாராணி தன்னை பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் எனக் கூறி, பேரூராட்சித் தலைவா் பதவியைப் பெற்றாா். இது சட்டவிரோதம். எனவே, அவரது பட்டியலின ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். மேலும், அவரை பேரூராட்சித் தலைவா் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு: இந்து பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா், கிறிஸ்தவ மதச் சட்டங்களைப் பின்பற்றி அந்த மதத்தைச் சோ்ந்தவரைத் திருமணம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் உள்ளன.
பேரூராட்சித் தலைவா் பதவிக்கு இவா் வேட்பு மனு தாக்கல் செய்த போதே இவரை உள்ளாட்சி தோ்தல் பிரிவு அலுவலா்கள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், தோ்தல் அலுவலா்கள் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டுள்ளனா்.
மொழி, இனம், மதம் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை பொதுமக்கள் தோ்ந்தெடுப்பதுதான் ஜனநாயகத்தின் உயிா் நாடி. இந்த நடைமுறை அரசியல் அமைப்புச் சட்டத்தால் வழிநடத்தப்படுகிறது. ஆனால், தோ்தல் பணிக்கு நியமிக்கப்படும் அலுவலா்கள் ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படுகின்றனா். இந்த நிகழ்வு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மீறுவதாக உள்ளது.
இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிட நலத் துறையினா் அமுதாராணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு அறிக்கை அளித்துள்ளனா். சட்டத்துக்குப் புறம்பான இந்த அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. அமுதாராணி திருமணச் சான்றிதழ் மூலம் அவா் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் இரு வேறு சலுகைகளை அனுபவிக்க இயலாது.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி, கிறிஸ்தவா் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, பொது சேவைப் பணிக்காக தன்னை இந்து என அடையாளப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏமாற்றும் செயல்.
எனவே, தேரூா் பேரூராட்சி தலைவராக அமுதாராணி தோ்வு செய்யப்பட்டதை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். மேலும், அவா் கிறிஸ்தவா் ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், பட்டியல் சமூகத்தைச் சாா்ந்தவா் என்கிற முறையில் அரசின் பலன்களைப் பெறுவதற்கான தகுதியை அமுதாராணி இழந்து விட்டாா். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.