Health: உணவை நொறுங்கத் தின்றால் 100 வயது வாழலாமா? டயட்டீஷியன் சொல்வது என்ன?
'பசித்துப் புசி, ருசித்துப் புசி’ என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்லும் இயந்திர வாழ்வில் இரவு உணவையாவது ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறோமா என்றால், அதுவும் இல்லை.
டிவியைப் பார்த்துக்கொண்டும், செல்போனைப் பார்த்துக்கொண்டும் ஏதோ கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு எழுகிறோம்.
நொறுங்கத் தின்றால் 100 வயது என்பதில் உண்மை இருக்கிறதா என்று, டயட்டீஷியன் காயத்ரி சொல்கிறார்.

செரிமானம் என்ற செயல் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் நொதிப்பொருட்கள், வாயிலிருந்தே உணவு செரிமானத்தைத் தொடங்கிவிடுகின்றன.
உணவை, உமிழ்நீருடன் கலந்து நன்றாக மென்று உண்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியம். சரியான தொடக்கம், பாதி வெற்றி என்பதைப் போல, சரியாக மென்று விழுங்கினாலே, செரிமானப் பணியில் 50 சதவிகிதம் முடிந்தது போலத்தான்.
சிறிய சிறிய விள்ளல்களாக உண்ண வேண்டும்.
நிதானமாகச் சீராக மெல்ல வேண்டும்.
வாயில் உள்ள உணவு உமிழ்நீரோடு கலந்து, அதன் தன்மையை இழந்த பிறகே விழுங்க வேண்டும். ஒரு வாய் உணவை 32 முறை மெல்ல வேண்டும் எனக் கூறுவது ஒரு உதாரணம்தான். அதன் அர்த்தம், நன்றாக உணவு கூழாகும் வரை மெல்ல வேண்டும் என்பதே.
ஒரு வாய் உணவை முழுதாக மென்று விழுங்கிய பிறகே, அடுத்த வாய் உணவை உண்ண வேண்டும்.
பேசாமல் உணவு உண்பது நல்லது.

சரியாக மெல்லப்படாததால், இரைப்பைக்குள் சென்ற உணவு மீண்டும் உணவுக் குழாய்க்கு வந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.
உணவில் இருக்கும் சத்து முழுமையாக கிடைக்காது.
அதிக அளவு உணவை உட்கொள்ளும் நிலை ஏற்படும்.
பற்களுக்குப் போதிய செயல்பாடு இல்லாமல், வலுவற்றுப்போகும்.
சராசரியாக நாம் உண்ணத் தொடங்கியதிலிருந்து 20 நிமிடங்களில் நம் மூளைக்கு நம் வயிறு நிறைந்துவிட்டது என்ற தகவல் செல்லும்.
நாம் மெதுவாக மென்று உண்ணும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும். இதனால், உடல் எடைக் குறைவதோடு, உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கவும் செய்யலாம்.
நம் உமிழ்நீரில் உள்ள என்சைம், கொழுப்பை உடைக்கக்கூடியது. இதனால், நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு, நன்கு செரிமானம் ஆகும்.
உணவு சிறிய பகுதிகளாக மாறுவதால் சீக்கிரமாக ஜீரணமாகிவிடுகிறது.
உணவை மெல்லும்போது, பற்களுக்கு அது நல்ல பயிற்சியாக உள்ளது. மேலும், வாயில் சுரக்கும் உமிழ்நீர், வாயில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடியது.

உமிழ்நீர் நம் உணவில் உள்ள பச்சையம் (Starch), ஃப்ரக்டோஸ் (Fructose), மற்றும் குளுக்கோஸ் (Glucose) ஆகியவற்றைப் பிரித்து செரிமானத்துக்கு ஏற்ப மாற்றுகிறது.
மெதுவாக மென்று உண்பதால், உணவின் ருசியை உணர்ந்து உண்ணும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், மனதுக்கு முழுமையான திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
‘நொறுங்கத் தின்றால் நூறு ஆண்டு’ என்ற நம் மூத்தோர் வாக்கில் பொய் ஏதுமில்லை. பொறுமையாக மென்று உண்டால் ஆரோக்கிய வாழ்வு அனைவருக்குமே நிச்சயம்’’ என்கிறார் டயட்டீஷியன் காயத்ரி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb