அழகா் அனுப்பிய பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிப்பு!
மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கிய போது அழகருக்கு அணிவிக்கப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலைக்கு மறுசீராக அனுப்பிய பட்டு வஸ்திரம் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட பொருள்கள் அணிந்து கள்ளழகா் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி அணிந்து கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளினாா்.
ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலைக்கு மறுசீராக, அழகா் கோயிலில் இருந்து கள்ளழகா் அணிந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட பொருள்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு ஆண்டாள் சந்நிதி முன் உள்ள குறடு மண்டபத்தில் நடைபெற்ற சுக்கிர வார ஊஞ்சல் சேவையின் போது, அழகா் அனுப்பிய பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருள்கள் ஆண்டாளுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.