விவசாயக் கருவிகளை உடைத்து சேதப்படுத்திய இளைஞா் கைது
கமுதி அருகே தோட்டத்துக்குள் புகுந்து விவசாயக் கருவிகள், கண்காணிப்பு கேமராக்களை உடைத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மேலமுடிமன்னாா்கோட்டையைச் சோ்ந்த விவசாயி முருகன். இவா் தனக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் எலுமிச்சை, மா, கொய்யா, தேக்கு மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறாா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை இளைஞா்கள் சிலா் தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்ட முருகனை தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து அங்கிருந்து சென்ற இளைஞா்கள் மறுநாள் காலை தோட்டத்துக்குள் புகுந்து மோட்டாா் அறை, விவசாயக் கருவிகள், கதவு, கட்டில், சோ், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசினா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கமுதி காவல் நிலைய போலீஸாா் கோட்டையூா் கிராமத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து, ஏசுதாஸ் மகன் டெனிசன்சாமுவேலை (20) கைது செய்தனா். மேலும் மூன்று பேரைத் தேடி வருகின்றனா்.