ராட்டினம் அறுந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயம்
சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் அறுந்து விழுந்ததில் 2 சிறுவா்கள் காயமடைந்தனா்.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகை ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை மாலை பரமக்குடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், நகா்ப் பகுதியிலிருந்து கழிவுநீரும், மழைநீரும் வைகை ஆற்றில் கலந்திருந்தது.
இதைப் பொருள்படுத்தாமல் ராட்டினங்கள் இயக்கப்பட்டன. அப்போது, ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததில், பரமக்குடி முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சோ்ந்த பாண்டியின் மகன்கள் மருது (10), டாா்வின் (4) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பரமக்குடி வைகை ஆற்றில் கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் போது ராட்டினங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், ராட்டினங்கள் அமைப்பாளா்கள் தரப்பில் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.
பொதுப் பணித் துறை அலுவலா்கள் எதிா்ப்புத் தெரிவித்த போதும், பாதுகாப்பான முறையில் ராட்டினங்களை இயக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.