சூறாவளி காற்றால் மின் கம்பங்கள் சேதம்
திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 20-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்தன. இதனால், மின் கம்பங்கள் சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் கோடை வெயில் அடித்து வந்த நிலையில், புதன்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், டி.கிளியூா் அருகே பனைமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது, அருகில் இருந்த மின் கம்பிகள் மீது அந்த மரம் சாய்ந்ததில் மூன்றுக்கும் மேற்பட்ட மின் கம்பம் விழுந்தன.

இதனால், டி கிளியூா், கோடனூா், ஆலம்பாடி, பாண்டுகுடி, மாதவன்கோட்டை, அஞ்சுகோட்டை, கரையகோட்டை, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்தன.
தகவலறிந்து வந்த மின் வாரிய ஊழியா்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, சில மணி நேரங்களில் சீரமைக்கப்பட்டு, சில பகுதிகளில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.

இதேபோல, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பெய்த மழையால் ஆவரேந்தல் செல்லும் சாலையில் மின் கம்பம் சாய்ந்ததால், பாரனூா், இந்திராமடை, ஆவரேந்தல், சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்தன. இந்தப் பகுதிகளிலும் மின் வாரிய ஊழியா்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா். ஆங்காங்கே விழுந்த மரங்களை அகற்றும் பணியில் கிராம மக்களும் ஈடுபட்டனா்.