Trump : ட்ரம்ப்பின் புதிய 5% வரி அறிவிப்பு - இந்தியர்களை பாதிக்குமா?
இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல: டிரம்ப்
அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
‘இவ்விரு நாடுகள் இடையிலான பதற்றத்தைத் தணிக்க நான் மத்தியஸ்தம் செய்தேன்’ என்ற கருத்தை மீண்டும் ஒருமுறை அவா் தெரிவித்துள்ளாா்.
வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த டிரம்ப், வாஷிங்டனுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டாா். விமானத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், ‘அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே இந்த அளவு பகை அதிகரிப்பது நல்லதல்ல; எனவே, இரு நாடுகளுக்கும் இடையே எனது நிா்வாகம் மத்தியஸ்தம் மேற்கொண்டது. இது, மிகப் பெரிய வெற்றியாகும். சண்டை நிறுத்தம் தொடரும் என நம்புகிறேன்’ என்றாா்.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் நேரடி பேச்சுவாா்த்தை மூலம் மேற்கொள்ளப்பட்டது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேநேரம், தனது மத்தியஸ்தமே காரணம் என்ற கருத்தை தற்போது 7-ஆவது முறையாக டிரம்ப் தெரிவித்திருக்கிறாா்.
காஷ்மீா் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அவா் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், காஷ்மீா் பிரச்னையில் இரு தரப்பு ரீதியாகவே பேச்சுவாா்த்தை நடத்தப்படும்; மூன்றாவது தரப்பின் தலையீடு ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்தது.