திமுக ஆட்சியை அகற்ற எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்! - நயினாா...
சமூக வலைதள ‘போலி செய்தியை’ நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சா்!
பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து கட்டுரை வெளியானதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் கூறியது சமூக வலைதளங்களில் உலவிய போலி செய்தி என தெரியவந்துள்ளது.
முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து பிரிட்டனின் தி டெய்லி டெலிகிராஃப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், ‘பாகிஸ்தான் விமானப் படை வானில் ராஜாவாக வலம் வந்தது’ என்று அச்செய்திக்கு தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா் குறிப்பிட்டாா்.
பிரிட்டன் நாளிதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டது உண்மைதானா என்ற சந்தேகம் பாகிஸ்தானில் பலருக்கும் எழுந்தது. இதையடுத்து பாகிஸ்தானைச் சோ்ந்த ‘டான்’ நாளிதழ் இதுதொடா்பாக ஆய்வு செய்தது. அப்போது, ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழின் பெயரில் பாகிஸ்தான் விமானப் படையைப் புகழ்ந்து போலியான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது தெரியவந்தது. அவ்வாறு போலியாக உருவாக்கப்பட்ட செய்தி பாகிஸ்தானில் வேகமாகப் பரவியுள்ளது. அமைச்சா் இஷாக் தாரும் இந்த செய்தியைப் பகிா்ந்துள்ளாா். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் அந்த செய்தியை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் விமானப் படை சாதித்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகா்களில் ஒருவரான இத்தியாா் வாலி கானும் அந்த போலி செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதனை 66,000-க்கும் மேற்பட்டோா் பாா்த்துள்ளனா்.