ஏலத்தில் எடுப்பதாகக் கூறி எடுக்காத RCB; அதே அணிக்கு கேப்டன்; கோலியின் ஆதரவு - பட...
எவரெஸ்ட் மலையேற்றம்: இந்தியர் உள்பட 2 வீரர்கள் பலி!
நேபாளத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் 2 வீரர்கள் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமய மலைத்தொடர்களில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில் ஏறிய இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகியுள்ளதாக அவர்களது மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில், இந்தியாவைச் சேர்ந்த சுபத்தரா கோஷ் என்ற நபர் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து திரும்பி வரும்போது 8,849 மீட்டர் (29,032 அடி) உயரத்தில் நேற்று (மே 15) மரணமடைந்துள்ளார்.
இதேபோல், பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த பிலிப் சாண்டியாகோ (வயது 45) என்ற நபர் அம்மலையின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முகாம் 4-ஐ அடைந்துள்ளார். பின்னர், அங்கிருந்து எவரெஸ்ட்டின் உச்சியை அடைய மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தபோது கடந்த மே 14 ஆம் தேதியன்று பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களுக்கு மலையேறத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்த, நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பலியான இருவரது உடல்களும் எவரெஸ்ட் மலையிலேயே உள்ளதாகவும், சடலங்களைக் கீழே கொண்டு வருவது பற்றி இதுவரை திட்டமிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
எவரெஸ்ட் மலையில் மரணமடையும் மனிதர்களின் உடல்கள் மீட்பது மிகவும் கடினமானது மற்றும் விலை உயர்ந்தப் பணி எனக் கூறப்படுகிறது. மேலும், அம்மலையில் ஏறுவதற்கு மார்ச் மற்றும் மே மாதம் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவதினால் பலரும் இமய மலையின் உச்சியை அடைய முயற்சித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 1953-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் அவரது நேபாள உதவியாளரான டென்சிங் நோர்கே ஆகியோர் முதல்முறையாக எவரெஸ்ட் மலையில் ஏறி அதன் உச்சியை அடைந்தனர். அதன் பின்னர், அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! ஒரே நாளில் 93 பேர் பலி!