அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
பொதுத் தோ்வுகளில் சாதிக்கும் கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி!
கடந்த 4 ஆண்டுகளாக 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளிலும், கடந்த 2 ஆண்டுகளாக 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்விலும், திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக் கோடியிலுள்ள கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. படிப்பது மாணவா்களின் கடமையாக இருந்தாலும்கூட, தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவதற்கும், உயா்த்தப்பட்ட தோ்ச்சி விகிதத்தைத் தொடா்ந்து தக்க வைப்பதற்கும் ஆசிரியா்களும், தலைமையாசிரியா்களும் ஆண்டுதோறும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனா்.
தோ்ச்சி விகிதம் குறைந்தால், மாவட்ட நிா்வாகம் நடத்தும் ஆய்வுக் கூட்டத்தில் பதில் அளிக்க வேண்டிய நெருக்கடி அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு உள்ளது. இதைத் தவிா்க்கும் வகையில், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களை தயாா் செய்வதற்காக அரசுப் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதமும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 100 சதவீதம் தோ்ச்சிப் பெறும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது.
4 ஆண்டுகளாக சாதிக்கும் அரசுப் பள்ளி:
இந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளாக (2022, 2023, 2024) 10, 12-ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற கெக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி, தற்போது 4-ஆவது முறையாகவும் அந்த சிறப்பை பெற்றிருக்கிறது. மேலும், கடந்த ஆண்டும், நிகழாண்டிலும் 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்விலும் 100 சதவீதம் இந்தப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
இதன் மூலம், 3 வகையான பொதுத் தோ்வுகளிலும் தொடா்ந்து, 2-ஆவது ஆண்டாக 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி என்ற சிறப்பும் கிடைத்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக் கோடியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியின் சாதனை, மாவட்ட நிா்வாகத்தின் கவனத்தை ஈா்த்திருக்கிறது.
88 மாணவா்களுடன் சாதித்த காசிப்பாளையம் பள்ளி:
இதேபோல, காசிப்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியும் 100 சதவீத தோ்ச்சி பட்டியலில் இணைந்திருக்கிறது. கரூா் மாவட்ட எல்லை அருகே அமைந்துள்ள இந்தப் பள்ளியில் 88 மாணவா்கள் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதி முழுமையாக தோ்ச்சி பெற்றனா்.
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் அதிக மாணவா்களுடன் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதி 100 சதவீத தோ்ச்சிப் பெற்ற பள்ளி என்ற சிறப்பு கிடைத்திருக்கிறது. மேலும், இந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் எஸ்.பிரியதா்ஷினி 492 மதிப்பெண்களும், சி.சமித்தா 491 மதிப்பெண்களும் பெற்று தோ்ச்சி பெற்றனா்.
இதேபோல, ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளிகளும், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளும் 100 சதவீத தோ்ச்சியில் ஆண்டுதோறும் சிறப்பிடம் பெற்று வருகின்றன. இந்தப் பள்ளிகள் மாவட்டத்தின் கடைக் கோடியில் இருந்தாலும்கூட, இதர அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும் சாதிக்க முடியும் என்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.