பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீா்க்க, இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்தது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. எல்லை நெடுகிலும் அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான், இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஏவுகணைகள்-ட்ரோன்களை செலுத்தியது.
பாகிஸ்தானின் ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானிலேயே இடைமறித்து இந்தியா அழித்தது. அத்துடன், பாகிஸ்தானின் விமானப் படை தளங்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியது.
4 நாள்கள் போா்ப் பதற்றம் நீடித்த நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஒப்புதல் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெறப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பெட்டி..
2014-15 - ரூ.2.29 லட்சம் கோடி
2024-25 - ரூ.6.22 லட்சம் கோடி
2025-26 - ரூ.6.81 லட்சம் கோடி (9.2% அதிகரிப்பு)