நான் பயிற்சியாளராக இருந்திருந்தால், ரோஹித் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார்: ரவி சாஸ்திரி
தான் பயிற்சியாளராக இருந்திருந்தால், சிட்னி டெஸ்ட் போட்டியில் உங்களை விளையாட வைத்திருப்பேன் என ரோஹித் சர்மாவிடம் கூறியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதுவரை இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4,301 ரன்கள் குவித்துள்ளார். அதில் 12 சதங்கள் அடங்கும். அவரது சராசரி 40.57 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 212 ஆகவும் உள்ளது.
இதையும் படிக்க: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடாதீர்கள்: முன்னாள் ஆஸி. வீரர்
24 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ள ரோஹித் சர்மா, 12 போட்டிகளில் அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மோசமான ஃபார்ம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவினால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அவர் ஒருமுறை மட்டுமே 50 ரன்களைக் கடந்தார். அவரது சராசரி வெறும் 10.93 ஆக இருந்தது.
தனக்கு குழந்தை பிறந்ததால் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அதன் பின், அடுத்த மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். தனது மோசமான ஃபார்ம் காரணமாக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தாமாக முன்வந்து பிளேயிங் வெலனில் விளையாடவில்லை என முடிவெடுத்தார்.
நான் பயிற்சியாளராக இருந்திருந்தால்...
அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், தான் பயிற்சியாளராக இருந்திருந்தால் நீங்கள் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பீர்கள் என ரோஹித் சர்மாவிடம் கூறியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகளில் டாஸ் சுண்டப்படும்போது, ரோஹித் சர்மாவை நான் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். டாஸ் சுண்டப்படும்போது, பேசுவதற்கு அதிக நேரம் இருக்காது. இருப்பினும், ஒருபோட்டியின்போது ரோஹித் சர்மாவிடம் நான் பேசினேன். மும்பையில் நடைபெற்ற போட்டி என நினைக்கிறேன். நான் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால், நீங்கள் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்திருக்க மாட்டீர்கள் என அவரிடம் கூறினேன்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதால் அச்சமடையத் தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்
தொடர் இந்தியாவின் கையை விட்டு நழுவவில்லை. அதனால், நீங்கள் கடைசி போட்டியில் விளையாடியிருப்பீர்கள். அந்த சூழலில் போட்டியில் நீங்கள் விளையாடியிருக்க வேண்டும். சிட்னியின் சவாலான ஆடுகளத்தில் டாப் ஆர்டரில் நீங்கள் 35-40 ரன்கள் எடுத்திருந்தால், அந்த தொடர் சமனில் கூட முடிந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. நானாக இருந்திருந்தால், ரோஹித் சர்மா சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார். அது என்னுடைய ஸ்டைல். அதனை ரோஹித் சர்மாவுக்கு தெரியப்படுத்தினேன். இந்த விஷயம் நீண்ட நாள்களாக எனக்குள் இருந்தது. அதனை வெளிக்கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். அதனை ரோஹித் சர்மாவிடம் கூறிவிட்டேன் என்றார்.
மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடுத்த மாதம் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.