ஆபரேஷன் சிந்தூர்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு விரைவில் வெ...
Vijayakanth: `அசிஸ்டன்ட்டாக இருந்த எனக்கும் கேப்டன் செட்ல ஹார்லிக்ஸ்!' - நெகிழ்ந்த ஏ.ஆர்.முருகதாஸ்
விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கும் 'படை தலைவன்' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிக்குமார், ஏ.ஆர். முருகதாஸ், கஸ்தூரி ராஜா, பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், "நான் வசனகர்த்தா கலைமணி சாரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.
'கருப்பு நிலா' படத்தின் சமயத்தில்தான் கேப்டனை முதல் முதலாக நேரில் பார்த்தேன். நான் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருந்தேன்.
`கிளாஸில் இருந்தது ஹார்லிக்ஸ்'
எனக்கு ஒரு கிளாஸ் கொடுத்தார்கள். நான் அது மோராக இருக்குமென்று நினைத்து குடித்தேன்.
கிளாஸில் இருந்தது ஹார்லிக்ஸ் என்று குடித்த பிறகுதான் தெரிந்தது. நம்மைப் போன்ற ஒரு அசிஸ்டன்டுக்கு ஹார்லிக்ஸ் கொடுப்பார்களா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது அது வேறு யாரோ குடித்து மிச்சமான ஹார்லிக்ஸா என்றும் பார்த்தேன்.
பிறகு ஓரமாகப் போய்ப் பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது. அடுப்பில் பெரிய பாத்திரத்தில் ஹார்லிக்ஸ் உடைத்து கொட்டிக் கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், நான் அதை நேரில் பார்த்திருக்கிறேன். கேப்டன் இருக்கும் செட்டில் அனைவருக்கும் ஹார்லிக்ஸ், இளநீர் கொடுப்பார்கள்.
'கருப்பு நிலா' படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது.
அங்கு சிலர் சபரிமலைக்கு மாலைப் போட்டிருந்தார்கள். அப்படி மாலை போட்டிருந்தவர்கள் சாப்பிடும் இடத்திற்குச் சென்று கவனித்து அவர்களுக்கு தனியாக உணவும் செய்யச் சொன்னார்.
ஒரு நடிகர் படத்தில் தனக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்று மட்டுமே கவனிப்பார். ஆனால், கேப்டன் மற்றவர்களின் வயிறு நிறைய வேண்டுமென நினைப்பார்." என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.