இமயத்தின் ஓர் அழகான ஆபத்தை நோக்கிய எங்கள் பயணத்தின் முதல் நாள்! - திசையெல்லாம் பனி - 1 | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அலெக்ஸாண்டரும் பாபரும் பெரும்படைகளுடன் வந்து அசந்த, அதிர்ந்துபோன மலைத்தொடர்கள். வானுயர்ந்த மலைகள் ஒரு புறம், ஆழமான பள்ளத்தாக்குகள் மறுபுறம்.
நடுவில் கரடுமுரடான சாலைகள். சிலசமயம் அதுவும் இருக்காது. மாறிக்கொண்டே இருக்கும் தட்பவெப்ப நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒரு நாள் மழையடித்தால், மறு நாள் பனி பொழியும். அதைக் கடந்து வந்தால் மணல் புயல் சுழன்றடித்துக் கொண்டு நமக்காகக் காத்திருக்கும். அப்படி ஓர் அழகான ஆபத்து தான் லடாக்.

சொர்க்கம் என்பது கட்டுக்கதை, ஆனால் லடாக் உண்மை என்று சொல்வார்கள். அதை நேரில் சென்று தான் பார்த்துவிடுவோமே என்று நாங்கள் மேற்கொண்டது தான் இந்தப் பயணம். பத்து நாள்களில் இமயமலைத் தொடர்களின் ஆயிரம் மைல்களை நானும் என் கணவர் நவீனும் பைக்கில் கடந்து வந்த பயணமிது.
ஜூன் முதல் செப்டம்பர் வரை வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே இந்த வழித்தடம் முழுவதுமாகத் திறந்திருக்கும். மற்ற காலங்களில் கடும் பனி போர்த்திய சாலைகளாகத் தான் இவை இருக்கும். இங்குப் பைக் பயணம் செய்ய விரும்புபவர்கள் தனியாகத் திட்டமிடலாம் அல்லது பயணக்குழுவோடு இணைந்தும் கொள்ளலாம். நாங்கள் ஒரு பயணக்குழுவோடு இந்தப் பயணத்தை மேற்கொண்டோம்.
இரண்டு வருடங்களாகவே இந்த திட்டம் இருந்தது. பல காரணங்களுக்காக அது தள்ளியும் போனது. இன்ஸ்டாகிராமில் இந்த ஆண்டிற்கான கடைசி பயணக்குழு என்கிற அறிவிப்பைப் பார்த்ததும், நொடியும் யோசிக்காமல், கிளம்புவது என்று தீர்மானித்தோம்.
நாங்கள் பயணத்தைத் தொடங்கியது செப்டம்பர் கடைசி வாரத்தில், அதன் பின் குளிர் காலம் தொடங்கிவிடும். சுமார் 2400 கிமீ நீளம் உடைய இந்த இமயமலைத் தொடர்கள் தோன்றிய விதம் இந்தப் பயண அனுபவத்தை இன்னும் முழுமையாக்கும்.

ஏறத்தாழ 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து நிலப்பகுதிகளும் ஒரே தொகுப்பாகவும், அதைச் சுற்றி நீர்ப்பரப்பும் இருந்தது. இந்த நிலப்பகுதிகள் மேலும் தனித்தனி துண்டுகளாகப் பிரிந்தன. அதில், இந்திய டெக்டோனிக் நிலப்பகுதி, வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசியேன் நிலத்தட்டோடு மோதியதன் விளைவு தான் இந்த இமயமலை தொடர்கள்.
இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் நடப்பதற்குப் பல மில்லியன் வருடங்கள் ஆயின. இன்றும் இந்த நிலத்தட்டுகள் நகர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அதனால் இமய மலைத்தொடர்களின் உயரமும் ஆண்டுக்குத் தோராயமாக இரண்டரை அங்குலம் கூடிக்கொண்டே போகிறது. இந்த மலைத் தொடர்களைச் சுலபமாகப் புரிந்துகொள்வதற்கு நீளம், உயரம், அகலம், திசை வாக்கில் பல பகுதிகளாகப் பிரிக்கலாம்.
அப்படி அகல வாக்கில் வகைப்படுத்தினால், அது சிவாலிக் குன்றுகள், ஹிமாச்சல், ஹிமாத்ரி, டிரான்ஸ் இமயமலைகள் என்று வகைப்படும். இமயமலைகளின் தென்கோடிப் பகுதியில் உள்ள தொடர்கள் சிவாலிக் அல்லது வெளிப்புற இமயமலைகள் என்றையப்படுகிறது.

அடுத்தது இமாச்சல் தொடர். இங்கு தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு, காங்க்ரா பள்ளத்தாக்கு, குலு பள்ளத்தாக்கு போன்றவை அமைந்துள்ளன. இது தான் நம் பயணம் தொடங்கும் இடம். அதன் உள்ளடுக்கு மலைத்தொடர்கள் ஹிமாத்ரி.
எப்போதும் பனி மூடப்பட்டிருப்பதால் ஹிமாத்ரி எனப் பெயர் பெற்றிருக்கிறது. உலகின் மிக உயர்ந்த மலைத் தொடர்கள். இமயமலைத் தொடர்களிலேயே தொடர்ச்சியான மலைப் பகுதிகளைக் கொண்டது ஹிமாத்ரி. நாம் பயணிக்கப்போகும் பரா- லாச்சா லா (Bara Lacha La Pass) ஜோஜி லா ( Zoji La Pass), போன்ற பல முக்கியக் கணவாய்களும் இத்தொடர்களில் அமைந்துள்ளன.
டிரான்ஸ் இமயமலைகள் (The Trans-Himalayas) ஹிமாத்ரி தொடர்களுக்கு வடக்கே இருக்கும் பகுதிகளைக் குறிக்கிறது. இதில் தான் லடாக், காரகோரம் போன்ற தொடர்கள் உள்ளன.
கிளம்புவது என்று முடிவாகிவிட்டபின்னர், நாங்கள் எடுக்க வேண்டியதிருந்த அடுத்த முடிவு, பாதையைத் தேர்ந்தெடுப்பது. பயணக் குழு ஒருங்கிணைப்பாளர்கள், லே நகரைச் சென்றடைவதற்கு இரண்டு வழித்தடத் திட்டங்களை வைத்திருந்தனர். முதலாவது, மணாலியில் இருந்து தொடங்கும் வழி. இன்னொன்று ஸ்ரீநகரிலிருந்து லே செல்லும் வழி.

ஸ்ரீநகரிலிருந்து ஜோஜிலா பாஸ், கார்கில் வருவது படிப்படியாக ஆல்டிட்யூட் உயரும் வழி. அதுவே மணாலியில் இருந்து தொடங்கினால், முதல் நாளில் இருந்தே மிக உயரமான மலைப் பாதைகளை, கணவாய்களைக் கடந்து பயணிக்க வேண்டியதாக இருக்கும்.
சாகச பயணம் ஆயிற்றே தலைகீழாகத்தான் குதிக்கப்போகிறோம் என்று முடிவெடுத்து, மணாலி வழியாக லே சென்று, அங்கிருந்து ஸ்ரீநகரை அடையும் பயணத்திட்டத்தைத் தேர்வு செய்தோம். அடுத்தது, பயணத்திற்கு இணையான மனவெழுச்சியைத் தரும் பயணத்திற்கு முன்பான ஷாப்பிங்.
பத்து நாள் பயணத்தில் ஒவ்வொரு நாளும், ஓரிடத்திலிருந்து கிளம்பி இன்னொரு இடத்தில் தங்கும் படியாகத்தான் இருக்கும். தினமும் விடிந்ததும், மூட்டை முடிச்சுகளுடன் அடுத்த இடம் நோக்கி நகர வேண்டும் என்பதனால், சூழல் சக்கரம் கொண்ட ட்ரால்லி பைகள் இதற்கு ஒத்து வராது.
மலையேறுபவர்கள் பயன்படுத்தும் ஆளுயர முதுகு பைகளில் தான் எங்களுக்குத் தேவையானவற்றைக் கொண்டு சென்றோம்.
பயண ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பியிருந்த நெடும் பட்டியலில் இருந்த குளிர் ஆடைகள், வாட்டர்ப்ரூப் ஷூக்கள், மருந்துகள், கையுறைகள் எனப் பயணத்திற்குத் தேவையானவற்றைத் தேடிப்பிடித்து எடுத்துவைப்பதற்குச் சில நாள்களே கிடைத்தது.
பயணிக்கப் போகும் பல இடங்களில் எந்த ஒரு நெட்ஒர்க்கும் இருக்காது. காஷ்மீர் பகுதியில் போஸ்ட் பெய்டு சிம் மட்டுமே வேலை செய்யும் (பாதுகாப்பு காரணங்களுக்காக) என்பதால், ஒரு புது எண்ணை வாங்குவதற்காக அடையார் BSNL அலுவலகத்திற்குச் சென்றோம்.

அங்குச் சென்றதும் விவரம் கேட்டவர்கள், போஸ்ட் பெய்டு சிம் என்றதும், காஷ்மீர் போகிறீர்களா என்று விசாரித்தனர். ஆம் என நாங்கள் தலையசைப்பதற்குள், வெளியூர் செல்லவேண்டும் என்றால் தான் இங்கே சிம் வாங்க வருகிறார்கள் என்று அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.
சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றடைந்தது தான் முதல் பயணம். டெல்லியில் எங்களுடைய அணியினரைச் சந்தித்தோம். அவர்கள் குறிப்பிட்டிருந்த இடம், ஒரு பேருந்து நிலைய காத்திருப்பு அறை. அறிமுகமில்லாதவர்களுடன் அடுத்த பத்து நாள்கள் சேர்ந்திருக்கப்போகிறோம். பரிச்சயமில்லாத நிலம், மொழி, மக்கள் என வரும் நாள்களைப் பற்றிய எண்ணங்கள் எங்களுள் ஆர்வத்தையும் அதேசமயம் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
சிறிது நேரத்தில் எங்களுடன் பயணிக்கப்போகும் அனைவரும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். உடன் பயணிப்பவர்களின் பெயர், அடையாளம் எதுவும் தெரியாது. ஆனால் அனைவரது அலைபேசி எண்களும் வாட்சப் குழுவில் இருந்தன.
எங்களை அழைத்துச்செல்ல ஒருங்கிணைப்பாளர் பார்த் என்பவர் வந்திருந்தார். பல ஆண்டுக்கால ஜிம் சந்தாதாரர் என்பது அவரைப் பார்த்ததும் தெரிந்தது. ஆறடியைத் தாண்டிய உயரம். தோள்களைத் தொடும் நீள் முடி. கைகளில் ரைடிங் ஜாக்கெட்டுடன் நாங்கள் காத்திருந்த அறைக்குள் நுழைந்தார்.

அங்கிருந்து ஒரு முழு இரவு பேருந்துப்பயணம். முதல் நாள் இரவு எட்டு மணியளவில் பயணம் தொடங்கியது. மறுநாள் கண்விழிக்கும் போது கண்ணெதிரில் இமயமலை தொடர்கள் தெரியும் என்ற யோசனையே என்னைத் தூங்கவிடாமல் செய்தது. விளைவு, மறுநாள் காலையில், உண்மையில் ஜன்னல் வழியே மலைத்தொடர்கள் தெரிந்த போது, கண்களைத் திறந்து அதைப் பார்க்கக்கூட முடியாத அளவு தூக்கம் சொக்கிக்கொண்டு வந்தது.
மணாலி பேருந்து நிலையத்திலிருந்து நாங்கள் தங்கப்போகும் விடுதிக்கு எங்களை அழைத்து வர வாகனம் ஏற்பாடு செய்திருந்தனர். அங்குச் சென்றதும் வரவேற்பறையில் அனைவரும் சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது பளிச்சென்ற ஆரஞ்சு நிற கோட் அணிந்த ஒருவர், கையில் தலைக்கவசத்துடன் உள்ளே வந்தார். சராசரி உயரம், சாயம் தீட்டப்பட்ட சுருள் முடியுமாக அவரைப் பார்த்ததும் என்னால் ஊகிக்க முடிந்தது, கேப்டனாகத்தான் இருப்பார் என்று. ஆனால் அவரது வயதைத் தான் கணிக்க முடியவில்லை. எங்களுடன் வந்த ஒருங்கிணைப்பாளர் பார்த் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இவர் தான் சஷாங்க். நம்முடைய பயணத்தில் நம்மை வழிநடத்திச்செல்லப்போகிறவர் என்றார். அவரைத் தொடர்ந்து சஷாங்க் பேச ஆரம்பித்தார். ஹாய், ஹலோ. என்று ஆங்கிலத்தில் தொடங்கியவர், சட்டென ஹிந்தியில் பேச்சைத் தொடர, அதைச் சகஜமாக அங்கிருந்தவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.
நான் சில நொடிகள் அங்கிருப்பவர்களைச் சுற்றிப்பார்த்து விட்டு, இனி தாமதித்தால் ஆகாதென்று, பேச்சின் இடையே குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
நாங்கள் சென்னையிலிருந்து வருகிறோம், எங்களுக்கு இந்தி தெரியாது. ஆங்கிலத்தில் பேச முடியுமா என்று கேட்டேன். அவர் உடனே, தாராளமாக. இங்குப் பல ஊர்களிலிருந்து வந்து நாம் ஒன்றாக இணைந்திருக்கிறோம். நாம் எல்லோருக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் நம் உரையாடல்களை இனிமேல் தொடரலாம் என்றார்.

எங்களது பயணத்தை பற்றிய விசாரிப்புகளுக்குப் பிறகு, தொடர்ந்து பேசினார். இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் அனைவரும் என்னுடைய பொறுப்பு. உங்கள் சந்தேகங்களை என்னிடம் கேளுங்கள். அடுத்த பத்து நாள்களுக்கு நாம் ஒன்றாக இருக்கப்போகிறோம், அதற்கு முன்பு சுருக்கமாக உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள் என்றார்.
ஒவ்வொருவராக அவர்களது பெயர், ஊரைச் சொன்னார்கள். அப்போதுதான் தெரிந்தது, பார்த்துப் பார்த்து தேர்வுசெய்ததைப் போல, அணியினர் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்தனர். டெல்லி, புனே, நாக்பூர், உத்தரப் பிரதேசம், ஹைதராபாத், கர்நாடகா, சென்னை, கேரளா என ஐபிஎல் அணிப் பட்டியலைப் போல இருந்தது.

அனைவரும் பேசி முடித்ததும், அவரவர்களுக்கான அறை சாவிகளைக் கொடுத்து, எல்லோரும் நன்றாக ஓய்வெடுங்கள், இன்றைய தினம் முற்றிலும் இளைப்பாறுவதற்காகத் தான். நாம் பைக் பயணத்தைத் தொடங்கும் முன்பு இந்த இடத்தின் தட்பவெப்பநிலைக்கு நீங்கள் பழக வேண்டும்.
அதை acclimatizing என்பார்கள். அருகில் சுற்றிப் பார்க்க வேண்டிய சில இடங்கள் உள்ளன, உணவகங்களும் தான். பொறுமையாக அவற்றை நீங்கள் பார்த்துவரலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் அதிக நேரம் வெளியே சுற்றிச் சோர்வடைந்துவிடாதீர்கள். வரும் நாள்களில் நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம். அதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.
- ராஜ்ஸ்ரீ செல்வராஜ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.