குடும்பத்துடன் தாயகத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர்! அங்கோலாவில் தஞ்சம்!
மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காபோன் நாட்டின் முன்னாள் அதிபர் தனது குடும்பத்துடன் அந்நாட்டை விட்டு வெளியேறி அங்கோலாவில் தஞ்சமடைந்துள்ளார்.
காபோன் நாட்டின் முன்னாள் அதிபரான அலி போங்கோ ஒண்டிம்பாவின் ஆட்சி கடந்த 2023-ம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின், ராணுவ உயர் அதிகாரியான ஜெனரல் பிரைஸ் ஒலிகுய் நுகுமாவின் தலைமையிலான இந்தப் புரட்சியினால் முன்னாள் அதிபர் போங்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், அதிபர் போங்கோ வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் தலைநகர் லிப்ரவில்லில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் மூலம் ஜெனரல் பிரைஸ் ஒலிகுய் நுகுமா அந்நாட்டின் அதிகாரப்பூர்வ அதிபரானார். பின்னர், அங்கோலா அதிபர் ஜோனோ லுரென்சோ மற்றும் அதிபர் நுகுமா ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்னாள் அதிபர் போங்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், விடுதலையான அவரது குடும்பத்தினர் காபோன் நாட்டைவிட்டு வெளியேறி அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவை அடைந்துள்ளதாக அதிபர் ஜோனோ லுரென்சோவின் அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காபோனின் முன்னாள் பிரதமரும், போங்கோ குடும்பத்தினரின் செய்தித்தொடர்பாளருமான அல்யின் க்ளவுடி பில்லி கூறுகையில், சட்டவிரோதமான முறையில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் பாங்கோவின் குடும்பத்தினர் சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலினால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுமார் 23 லட்சம் மக்கள் வாழும் காபோன் நாட்டை அதிபர் போங்கோவின் குடும்பத்தினர் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் மூலம் கபோனின் குடியரசுப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் பிரைஸ் ஒலிகுய் நுகுமாவின் தலைமையிலான ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மீண்டும் தலைத்தூக்கும் கரோனா? சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரிக்கும் பாதிப்புகள்!