பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
பப்புவா நியூ கினியா நாட்டில் போலியோ தொற்று பரவுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள லேய் எனும் கடலோர நகரத்தில், வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, இரண்டும் ஆரோக்கியமான குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மிகவும் கொடிய போலியோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பப்புவா நியூ கினியா நாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி கூறுகையில், இந்த நோய் பரவலைத் தடுக்க அதிகப்படியான முயற்சிகளை மேற்கொண்டு அந்நாட்டு குழந்தைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு அந்நாட்டில் போலியோ தொற்று முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், 2018-ம் ஆண்டு அங்கு புதியதாக போலியோ தொற்றுக்கள் பதிவாகின. இருப்பினும், அதே ஆண்டில் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
பப்புவா நியூ கினியா நாடானது இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்துடன் எல்லையைப் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள வைரஸ்-களும், இந்தோனேசியாவில் பரவி வரும் வைரஸ்-களும் மரபியல் ரீதியாக ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், நிகழாண்டின் (2025) இறுதிக்குள், 100 சதவிகித குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக பப்புவா நியூ கினியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் இலியாஸ் கபாவோரே தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் இந்த முயற்சிக்கு உலக சுகாதார அமைப்பு, ஐ.நா.வின் குழந்தைகள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலியா அரசு ஆதரவளிப்பதாகக் கூறப்படுகிறது.
இதில்,பப்புவா நியூ கினியாவில் வாழும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 35 லட்சம் மக்கள் இதன்மூலம் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி வைல்ட் போலியோ வைரஸின் வகை 2 மற்றும் வகை 3 கடந்த 1999 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் முற்றிலும் அழிக்கப்பட்டன.
2022-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், வகை 1 வைரஸ்களினால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகள் மட்டுமே பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தோனேசியா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி