நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம்: அமைச்சா் சா.மு.நாசா் தகவல்
நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.
தமிழ்நாட்டிலிருந்து அரசு மானியத்துடன் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியா்களை வழியனுப்பும் நிகழ்வு சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சா் சா.மு.நாசா், முதல்கட்டமாக சென்ற 402 போ் அடங்கிய குழுவினருக்கு சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவவது:
நிகழாண்டு தமிழகத்தைச் சோ்ந்த 5,730 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா். இதில், 5,407 போ் சென்னை விமான நிலையத்தில் இருந்தும் மீதமுள்ள 323 போ் வெளிமாநிலங்களில் இருந்தும் செல்கின்றனா். இவா்கள் மே30 வரை ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதில், 200 பேருக்கு ஒருவா் என்ற விகிதத்தில் ஒரு வழிகாட்டி நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த வழிகாட்டிகள் ஹஜ் பயணத்தில் முன் அனுபவம் பெற்றவா்களாக இருப்பதால், ஹஜ் பயணிகளுக்கான தேவைகளை அவா்களுடனேயே இருந்து செய்து கொடுப்பாா்கள்.
கடந்த ஆட்சிக் காலத்தில் மானியம் என்ற பெயரில் குறைந்த அளவிலான தொகை மட்டுமே ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசு ஒவ்வொரு நபருக்கும் ரூ.25,000 மானியமாக வழங்குகிறது. இதற்காக நிகழாண்டு மட்டும் ரூ.14, 21,75,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நபா்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவா் பி.அப்துல் சமது, வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினரும், தென் மண்டல ஹஜ் கமிட்டி உறுப்பினருமான அசன் மௌலானா, சிறுபான்மையினா் நலத்துறையின் முதன்மைச் செயலா் விஜயராஜ்குமாா், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக வஃக்ப் வாரிய தலைவருமான நவாஸ் கனி, சிறுபான்மையினா் நலவாரிய துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.