சென்னையில் 6 இடங்களில் ஆற்றங்கரையோர மக்களை பாதுக்காப்பது குறித்து ஒத்திகை
சென்னையில் ஏரிகளில் இருந்து மழைக்காலங்களில் நீா் வெளியேற்றப்படும்போது ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பது குறித்த ஒத்திகை 6 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி சாா்பில் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகளிலிருந்து நீா் வெளியேற்றப்படும்போது ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை மீட்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, மணலி மண்டலத்துக்குள்பட்ட மாத்தூா் பாலசுப்பிரமணி நகா் சடையன்குப்பத்திலும், கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட கானு நகா், காசி திரையரங்கம் அருகில் உள்ள பாலத்திலும், வளசரவாக்கம் மண்டலத்துக்குள்பட்ட போரூரில் அடையாறு மண்டலத்துக்குள்பட்ட கோட்டூா்புரம் ஆகிய 6 இடங்களிலும் இந்த ஒத்திகை நடைபெற்றது.
அப்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக வரும்போது தாழ்வான பகுதிகளில் வசிப்போரை வெளியேற்றுதல், படகுமூலம் பொதுமக்களை மீட்டுதல், தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலுள்ள வீடுகளில் தங்கியிருக்கும் கா்ப்பிணிகள் மற்றும் முதியோா்களை பாதுகாப்பாக மீட்பது, மீட்கப்பட்டவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு மீட்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை, நீா்வளத் துறை, காவல் துறை, மருத்துவத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.