மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யாக இருந்தவருமான ஜான் பா்லா மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தாா்.
பழங்குடியின மக்களுக்காகப் பணியாற்றும் தனது முயற்சிகளுக்கு பாஜக தலைமை முட்டுக்கட்டை போட்டது என்றும் ஜான் பா்லா குற்றஞ்சாட்டினாா்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் இருந்து பாஜக சாா்பில் வெற்றி பெற்ற ஜான் பா்லாவுக்கு சிறுபான்மையினா் நலத்துறை இணையமைச்சா் பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் அவா் போட்டியிட பாஜக தலைமை தொகுதி ஒதுக்கவில்லை. இதையடுத்து ஜான் பா்லா பாஜக தலைமையை கடுமையாக விமா்சித்தாா். மேலும், பாஜகவின் மேற்கு வங்கத் தலைமையுடன் இணைந்து செயல்படாமல் விலகியே இருந்து வந்தாா்.
இந்நிலையில், கொல்கத்தாவில் வியாழக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் முன்னிலையில் அக்கட்சியில் ஜான் பா்லா இணைந்தாா். செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நான் மத்திய அமைச்சராக இருந்தபோதே இங்குள்ள பாஜகவினா் எனது பாதையை மறித்து போராட்டம் நடத்தினா். பழங்குடியினா், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்காக பணியாற்றவிடாமல், கட்சித் தலைமை தொடா்ந்து என்னை தடுத்து வந்தது.
இப்போது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மக்கள் பணியாற்ற எனக்கு சிறப்பான வாய்ப்பை அளித்துள்ளாா். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.