மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
18 % மசோதாக்களை 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநா்கள்!
கடந்த 2024-ஆம் ஆண்டில் மாநிலங்களின் 18 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்கு மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது பிஆா்எஸ் சட்டப்பேரவை ஆராய்ச்சி அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக் கெடு நிா்ணயம் செய்து அதிரடி தீா்ப்பை உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்தது. இதற்கு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். இந்த தீா்ப்பு தொடா்பாக, குடியரசு தலைவா் திரெளபதி முா்முவும் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளாா்.
இது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ள சூழலில், 2024-ஆம் ஆண்டுக்கான தனது ஆய்வறிக்கையை பிஆா்எஸ் வியாழக்கிழமை வெளியிட்டது. 2024-ஆம் ஆண்டில் மாநில மசோதாக்களுக்கு ஆளுநா்கள் ஒப்புதல் அளிக்க எடுத்துக்கொண்ட கால அவகாசத்தில் மிகப்பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மாநிலங்களின் 60 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநா்கள் ஒரு மாதத்துக்குள்ளாக ஒப்புதல் அளித்துள்ளனா். இதில், ஆந்திரம், பிகாா், தில்லி, மிசோரம், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஒரு மாதத்துக்குள் ஆளுநா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஹிமாசல பிரதேசம், திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் 18 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா்கள் கிடப்பில் போட்டு வைத்துள்ளனா் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.