Aamir Khan: ``எனக்கும் சல்மான் கானுக்கும் அதே ஆசைதான்'' - சொல்கிறார் ஆமீர் கான்
தனது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்குத் தனது புதிய துணையை அறிமுகப்படுத்தியிருந்தார் பாலிவுட் நடிகர் ஆமீர் கான். இதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தான அப்டேட்டையும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் `மகாபாரதம்' கதையைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என ஆமீர் கான் கூறியிருந்தார். அது குறித்துப் பேசிய அமீர் கான், ``மகாபாரதம் திரைப்படத்திற்கான பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். அதற்காக ஒரு குழுவை ஒருங்கிணைத்து படத்திற்கான எழுத்துப் பணிகளைத் தற்போது தொடங்கியிருக்கிறோம்.

முதலில் இந்தக் களம் எப்படி செல்கிறது எனப் பார்ப்போம். அதன் பிறகே அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கவிருக்கிறேன். " என்றார். கடந்த 1994-ம் ஆண்டு ஆமீர் கான், சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான `அன்டஸ் அப்னா அப்னா' திரைப்படம் இன்றுவரை கல்ட் திரைப்படமாகக் கொண்டாடப்படுகிறது.
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் சுற்றி வந்தன. அது குறித்து ஆமீர்கான் பேசுகையில், `` `அன்டஸ் அப்னா அப்னா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நடக்க வேண்டும் என நான் ஆவலாக இருக்கிறேன். இயக்குநர் சந்தோஷியிடம் அத்திரைப்படத்திற்கான கதையைத் தயார் செய்வதற்குச் சொல்லியிருக்கிறோம். இந்த இரண்டம் பாகத்தை பண்ண வேண்டும் என எனக்கும் சல்மான் கானுக்கும் விருப்பம் இருக்கிறது" என்றவரிடம், `` சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான் என பாலிவுட்டின் மூன்று கான்களும் இணைந்து நடிப்பீர்களா ?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு, `` சரியான கதை அமைந்தால் நாங்கள் ஏன் பண்ணக்கூடாது?'' எனக் கூறினார்

ஆமீர் கான் நடித்திருக்கும் `சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது. 2007- ம் ஆண்டு ஆமீர் கான் நடிப்பில் வெளியான `தாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் சீக்குவல்தான் இத்திரைப்படம்