Aamir khan : `அன்பான லைஃப் பார்ட்னரை தேடியபோது..!' - ஆமீர் கானிடம் காதலில் விழுந்தது குறித்து கெளரி
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். ஏற்கனவே இரண்டு பேரை காதலித்து அவர்களை திருமணம் செய்து விவாகரத்தான நிலையில் ஆமீர் கான் தனித்து வாழ்ந்து வந்தார். தற்போது தனது 60வது பிறந்த நாளில் ஆமீர் கான் புதிய லைஃப் பார்ட்னரை அறிமுகம் செய்துள்ளார்.
புதிய தொடக்கம்!
25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான கெளரி ஸ்ப்ராட் என்ற பெண்ணுடன் இப்போது ஆமீர் கான் வாழ்ந்து வருவதாக மீடியா பிரமுகர்களுக்கு கெளரியை அறிமுகம் செய்தபோது தெரிவித்தார். இருவரும் எப்படி அறிமுகமானார்கள் என்பது குறித்து ஆமீர் கான் கூறுகையில்,'' முதன் முதலில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கெளரியை சந்தித்தேன். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான தொடர்பு விட்டுப்போனது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது உறவினர் ஒருவர் மூலம் மீண்டும் கெளரியின் அறிமுகம் கிடைத்தது.

அந்நேரம் எனக்கு அமைதியை தரக்கூடிய ஒருவரை தேடிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கெளரியின் அறிமுகம் மீண்டும் கிடைத்தது. இப்போது நான் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டேன்''என்றார்.
பாலிவுட்டை ஆட்சி செய்யும் மூன்று கான்களில் ஆமீர்கான் தான் முதல் முறையாக 60-வது வயதை எட்டி இருக்கிறார். இது குறித்து ஆமீர் கான் கூறுகையில், ``நான் இன்னும் 18 வயது பையனாகவே உணர்கிறேன்'' என்று தெரிவித்தார். ஆமீர் கான் அபூர்வமாகத்தான் வீட்டுப்பெண்களை மீடியா முன்பு அழைத்து வருவது வழக்கம். கெளரியை அறிமுகம் செய்யவேண்டும் என்பதற்காக அவரை பத்திரிகையாளர்கள் முன்பு அறிமுகம் செய்து இது எனது லைஃப் பார்ட்னர் என்று கூறி அவரது நெற்றியில் முத்தமிட்டார் ஆமீர் கான்.
`அன்பான ஜென்டில்மெனை விரும்பினேன்’
ஆமீர் கானை சந்தித்தது மற்றும் அவருடன் காதலில் விழுந்தது குறித்து கெளரி கூறுகையில், ''எனக்கு லைஃப் பார்ட்னர் தேவைப்பட்டது. என்னை கவனித்துக்கொள்ளக்கூடிய அன்பான ஜென்டில்மெனை விரும்பினேன். எனவேதான் ஆமீர் கானை விரும்பினேன்''என்று தெரிவித்தார்.
கெளரி பெங்களூருவில் வளர்ந்தவர் என்பதால் இந்தி சினிமா பற்றியோ ஆமீர் கானின் படங்கள் குறித்து பெரிய அளவில் தெரிந்திருக்கவில்லை. இது குறித்து ஆமீர் கான் கூறுகையில், ''கெளரி பெங்களூருவில் இருந்ததால் எனது நடிப்பு மற்றும் படங்கள் குறித்து தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு லகான் உட்பட எனது இரண்டு படங்களை மட்டுமே பார்த்திருக்கிறார். கெளரி என்னை சூப்பர்ஸ்டாராக பார்க்கவில்லை. லைஃப் பார்ட்னராகத்தான் பார்க்கிறார். நானும், கெளரியும் சேர்ந்து தாரே ஜமீன் பர் படத்தை பார்த்தோம்''என்று தெரிவித்துள்ளார்.

கெளரியின் தாயார் ரிதா ஸ்ப்ராட் பெங்களூருவில் சலூன் கடை வைத்திருக்கிறார். 6 வயது குழந்தைக்கு தாயான கெளரி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆமீர் கானுடன் திருமணம் செய்து கொள்ளாமல் மும்பையில் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இப்போது ஆமீர் கானின் படப்பிடிப்பு வேலைகளை கெளரி முன்னின்று செய்து வருகிறார். ஆமீர் கானின் மற்ற இரண்டு முன்னாள் மனைவிகளும் தற்போது ஆமீர் கான் வீட்டின் அருகில்தான் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆமீர் கானின் படங்களில் பணியாற்றுவது போன்ற வேலைகளை சேர்ந்தே செய்கின்றனர்.
புதிய லைஃப் பார்ட்னரை ஆமீர் கான் தேர்ந்தெடுத்தது குறித்து தனது குடும்பத்தினர் மகிழ்ச்சிதான் என்று ஆமீர் கான் தெரிவித்துள்ளார். அதோடு தனது நண்பர்கள் சல்மான் கான் மற்றும் ஷாருக்கானையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்து தனது புதிய லைஃப் பார்ட்னரை அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.